சேலம்: சேலத்தில் அமுதசுரபி போலி கூட்டுறவு வங்கியில் ₹58 கோடி மோசடி வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி பிரேமானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் முனியப்பன்நகரை சேர்ந்தவர் ஜெயவேல் (67). இவர் தனது உறவினர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா ஆகியோருடன் சேர்ந்து சேலம் உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அமுதசுரபி சிக்கன மற்றும் கூட்டுறவு கடன் சங்கம் என்ற கூட்டுறவு வங்கியை தொடங்கினார். அதன்மூலம் ஏராளமானோரிடம் அதிக வட்டி தருவதாக கூறி பணத்தை முதலீடு பெற்றனர்.
இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம், சேலம் அம்மாபேட்டை தங்கசெங்கோடன் தெருவை சேர்ந்த பாஸ்கரன் (52) என்பவர், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், அமுதசுரபி கூட்டுறவு சங்கத்தில் முதலீடு செய்யப்பட்ட தனது பணம் ₹2.92 லட்சத்தை மோசடி செய்து விட்டனர் எனக்கூறியிருந்தார். இதுபற்றி இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தியதில், போலியாக கூட்டுறவு சங்கம் நடத்தி தமிழகம் முழுவதும் 86 கிளைகளை திறந்து ₹58 கோடி மோசடி செய்திருப்பதை கண்டறிந்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்தனர்.
அதனடிப்படையில், போலி கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவராக செயல்பட்ட ஜெயவேல், இயக்குநர்களான தங்கபழம், பிரேம்ஆனந்த், சரண்யா மற்றும் ஊழியர்கள் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடி வழக்கில் சங்க தலைவர் ெஜயவேல், கணக்காளர் கண்ணன், இயக்குனர் தங்கப்பழம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதைதொடர்ந்து, அமுதசுரபி செயல்பட்ட 2 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு பொதுமக்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக பெறப்பட்ட முதலீடு தொடர்பான ஆவணங்கள், கணினி, ஹார்டுடிஸ்குகளை போலீசார் கைப்பற்றினர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அயோத்தியாப்பட்டணத்தை சேர்ந்த சரண்யாவை(31) பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி பிரேமானந்தாவை போலீசார் தேடி வருகின்றனர்.
The post அமுதசுரபி போலி கூட்டுறவு வங்கியில் ₹58 கோடி மோசடி வழக்கில் இளம்பெண் கைது: முக்கிய குற்றவாளிக்கு வலை appeared first on Dinakaran.
