×

ஆண் குழந்தை சடலமாக குப்பையில் வீச்சு போலீஸ் விசாரணை தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, ஜூன் 25: தண்டராம்பட்டு அருகே ஆண் குழந்தை குப்பையில் சடலமாக வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த செ.ஆண்டப்பட்டு ஊராட்சி எல்லையில் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காக குப்பைகளை கொட்டி வருகின்றனர். இந்த குப்பைகளை ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணியாளர்கள் தினமும் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று காலை தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, வண்டியை நிறுத்தி விட்டு குப்பைகளை எடுக்கும்போது குப்பைக்கு அடியில் தொப்புள் கொடியுடன் பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தை சடலமாக வீசப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக ஊராட்சி மன்ற தலைவர் குப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் தானிப்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தானிப்பாடி போலீசார் அங்கு விரைந்து சென்று பச்சிளம் ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிந்து குழந்தையை சடலமாக வீசியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு தேடி வருகின்றனர். குப்பையில் ஆண் குழந்தை சடலம் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஆண் குழந்தை சடலமாக குப்பையில் வீச்சு போலீஸ் விசாரணை தண்டராம்பட்டு அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Thandaramptu ,Thandarampattu ,Dinakaran ,
× RELATED கடந்த ஆண்டு ஒரு கிலோ ₹10 முதல் ₹13 வரை...