×

₹26 கோடி மதிப்பில் புனரமைப்பு

ஓசூர், ஜூன் 25: கெலவரப்பள்ளி அணையின் மதகுகளை ₹26 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி துவங்கியது. இதன் மூலம் கிருஷ்ணகிரி அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் நந்தி துர்க்கத்தில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தின் வழியாக, கடலில் சென்று கலக்கிறது. இந்த ஆறு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு முதலில் வந்து, பின்னர் கிருஷ்ணகிரி அணை வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்கிறது. இந்த ஆற்று நீரை நம்பி பல்லாயிரக்கணக்கான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்நிலையில் கெலவரப்பள்ளி அணையின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ், ₹26 கோடி மதிப்பீட்டில் உபரிநீர் வழிந்தோடும் மதகுகள், மணல் போக்கி மதகு, கால்வாய் மதகுகள் ஆகியவற்றை மாற்றி அமைக்கும் பணிக்கு, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளை மேற்கொள்ள, முதலில் அணையில் உள்ள தண்ணீரை 24 அடியாக குறைப்பதற்கான பணி மற்றும் புனரமைக்கும் பணி நேற்று துவங்கியது. அதன்படி, தற்போது அணையின் மொத்த உயரமான 44.28 அடியில், தற்போது தேக்கி வைக்கப்பட்டுள்ள 41 அடிய தண்ணீரை ஆற்றில் திறந்து விட முடிவு செய்யப்பட்டது. நேற்று கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மற்றும் புனரமைப்பு பணிகளை கலெக்டர் சரயு, ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது: கெலவரப்பள்ளியில், அணை பாதுகாப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ், ₹26 கோடி மதிப்பீட்டில் உபரிநீர் வழிந்தோடி மதகுகள், மணல் போக்கி மதகு, கால்வாய் மதகுகள் ஆகியவற்றை மாற்றி அமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பணிகள் மேற்கொள்ள, அணையில் உள்ள நீர்மட்டத்தை 24 அடியாக குறைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து தண்ணீரை உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 24 அடியாக குறைந்த பின்னர், அணை மதகுகளின் புனரமைப்பு பணிகள் ₹26 கோடியில் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்படும். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம் உயரும்.

தற்போது கிருஷ்ணகிரி அணையின் மொத்த உயரமான 52 அடியில், 50.50 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. அணைக்கு 224 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அப்போது, கிருஷ்ணகிரி அணையில் இருந்தும் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் உதயகுமார், உதவி பொறியாளர்கள் ராதிகா, சிவசங்கரி, பொன்னிவளவன், ஓசூர் தாசில்தார் சுப்பிரமணி, கெலவரப்பள்ளி அணை பாசன விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post ₹26 கோடி மதிப்பில் புனரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Kelavarapalli dam ,Krishnagiri… ,Dinakaran ,
× RELATED தகாத உறவு காதலியை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கண்டக்டர் கைது