×

தவறான அறுவை சிகிச்சையால் உடல்நிலை பாதிப்பு அரசு மருத்துவமனைக்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண்

கடலூர், ஜூன் 25: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி பத்மாவதி. இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தபோது கடந்தாண்டு செப்டம்பர் 19ம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து, ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. 11 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பிறகு டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 14ம் தேதி அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு மூன்று நாள் சிகிச்சை அளித்தும் வயிற்றுவலி குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்த போது, கடலூர் அரசு மருத்துவமனையில் செய்த தவறான அறுவை சிகிச்சை காரணமாக வயிற்று வலி ஏற்பட்டதாக கூறினர். அதன் பிறகு ஜிப்மர் மருத்துவமனையில் மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்த பின்னரே வயிற்று வலி குணமானது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதையடுத்து கோட்டாட்சியர், சுகாதாரத்துறை இணை இயக்குனர், மருத்துவ அலுவலர் கொண்ட குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் இணை இயக்குனர் கலந்து கொள்ளாததால் மறுவிசாரணை நடத்த கேட்டுள்ளனர். அதன் பேரில் கடந்த டிசம்பர் 15ம் தேதி மறுவிசாரணை நடத்தினர். இருப்பினும் இது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன், அவரது மனைவி பத்மாவதி, மற்றும் உறவினர்களுடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மருத்துவமனை அதிகாரிகளும் வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென பத்மாவதி தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேனை வெளியே எடுத்தார். இதை பார்த்த போலீசார் அவரிடம் இருந்து பெட்ரோல் கேனை பிடுங்கினர். அப்போது வெங்கடேசன் கூறும் போது, கடலூர் அரசு மருத்துவமனையில் எனது மனைவிக்கு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்த போது, குடலையும் கர்ப்பப்பையையும் சேர்த்து தைத்து விட்டனர். இதனால் எனது மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து, அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார் ஆனால் விசாரணை நடந்தும் இதுவரை அந்த விசாரணை அறிக்கையை அவர்கள் எங்களுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்துக்கோ தெரிவிக்கவில்லை. தற்போது எனது மனைவிக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். எங்களுக்கு விசாரணை அறிக்கையை அளித்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கூறினார். அப்போது மருத்துவமனை அதிகாரிகள், பத்மாவதிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி மருத்துவ சான்றிதழ்களுடன் அவர்களை மருத்துவமனைக்கு உள்ளே அழைத்து சென்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தவறான அறுவை சிகிச்சையால் உடல்நிலை பாதிப்பு அரசு மருத்துவமனைக்கு பெட்ரோல் கேனுடன் வந்த பெண் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Venkatesan ,Padmavathi ,Siruvattur ,Panruti ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை