×

காரில் ஆயுதங்களுடன் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயற்சி; 3 பேர் கைது: அரியலூர் அருகே பரபரப்பு

அரியலூர், ஜூன் 24: அரியலூர் அருகே டாஸ்மாக் கடையில் கொள்ளை அடிக்க முயன்ற 5 பேரில், 3 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ஆனந்தவாடி கிராம பகுதிகளில் இரும்புலிக்குறிச்சி போலீஸ் எஸ்ஐ செல்வகுமார் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 3 மணி அளவில் ஆனந்தவாடியில் இருந்து கீழராயம்புரம் செல்லும் சாலையில் அவர்கள் சென்றனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு கார் நின்றது. இதனால் போலீசார் அந்த காரின் அருகில் சென்று பார்த்தபோது, காருக்குள் 5 பேர் இருந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஒருவர் கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் கொளக்குடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் (38) என்பதும், இவர் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மற்றவர்களை விசாரிக்க முற்பட்டபோது, 4 பேரும் அந்த பகுதியில் உள்ள ஏரி பகுதியில் குதித்து தப்பி ஓடினர். இதைக்கண்ட எஸ்ஐ செல்வகுமார் துரிதமாக செயல்பட்டு, அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். மேலும் கூடுதல் போலீசாரை வரவழைத்து ஏரியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விடிய, விடிய நடந்த தேடுதல் வேட்டையில் செந்துறை அடுத்த குழுமூரை சேர்ந்த வெள்ளையன் (21), பெரம்பலூர் மாவட்டம் பாலையூரை சேர்ந்த நவீன்குமார்(24) ஆகிய 2 பேரை போலீசார் பிடித்தனர்.

அவர்கள் வந்த காரை சோதனை செய்தபோது சைக்கிள் செயின், கம்பி, கடப்பரை மற்றும் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆனந்தவாடி டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டது, தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், காரை பறிமுதல் செய்து இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் 3 பேரையும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

The post காரில் ஆயுதங்களுடன் டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயற்சி; 3 பேர் கைது: அரியலூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Ariyalur ,Dinakaran ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...