×

கண்டதேவி கோயில் தேரோட்ட திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது

தேவகோட்டை, ஜூன் 25: தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தி உடனாய பெரியநாயகியம்மன் கோயில் தேரோட்ட திருவிழா நேற்று காப்புக்கட்டுதலுடன் துவங்கியது.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தி உடனாய பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நான்கு நாட்டார்கள் தலைமையில் நடந்து வந்த தேரோட்டம் இருபிரிவினரிடையே ஏற்பட்ட பிரச்னையால் நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்த வழக்கில், அனைவரும் தேர்வடம் பிடிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன்படி வருவாய்த்துறை காவல் துறை முன்னிலையில் தேரோட்டம் நடந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளாக வெவ்வேறு காரணங்களால் தேரோட்டம் நடைபெறவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளில் சமீபகாலமாக சப்பரபவனி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு தேர் வெள்ளோட்டம் நடைபெறாத நிலையில், நேற்று காலை கோயிலில் சிவாச்சாரியார்கள் காப்பு கட்டினர். இதனைத்தொடர்ந்து நேற்று முதல் 9 நாட்களுக்கு தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆரா தனைகள் நடைபெறும். வரும் ஜூலை 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (ஆனி மாதம் 17ம் தேதி) (கேட்டை நட்சத்திர தினம்)தேரோட்டம் நடைபெறும் தினமாகும். ஆனால் இதுவரை தேர் வெள்ளோட்டம் நடைபெறாத நிலையில், தேரோட்டம் நடைபெற சாத்தியமில்லை. எனவே சப்பர பவனியே நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

The post கண்டதேவி கோயில் தேரோட்ட திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kanda Devi Temple Chariot Festival ,Devakottai ,Kandadevi ,Sornamurthy ,Udanaaya Periyanayakeyamman Temple ,Kandadevi Temple Chariot Festival ,Dinakaran ,
× RELATED காய்கறி வியாபாரி ெகாலை வழக்கில் வேன்...