×

மாங்குரோவ் காடுகளுக்குள் போவோமா படகு சவாரி…? மணமணக்கும் கடல் உணவுகளுடன்

* காரங்காடு வாங்க… கண்கவர் கடல், தீவை கண்டு களிங்க…

ஆர்எஸ்.மங்கலம், ஜூன் 25: கமகமக்கும் கடல் உணவுகளுடன், உற்சாகமாக படகு சவாரியும் செய்யும் எழில்மிகு சூழலியல் சுற்றுலாதலமாக விளங்கும் காரங்காடுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. எனவே, இங்கு கூடுதல் வசதிகள் செய்து தர வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் காரங்காடு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சூழலியல் சுற்றுலாத்தலம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மாங்குரோவ் காடுகளுக்கிடையே கடலில் படகு சவாரி நடைபெறுகிறது. இங்கு ஏராளமான மாங்குரோவ் (அலையாத்தி) காடுகள் சுமார் 73 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இவை சுற்றுலாப்பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இந்த மாங்குரோவ் காடுகள் சுனாமி, புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கும் சக்தி கொண்டவை. இக்காடுகளுக்கு அருகிலேயே பக்கவாட்டில் கடற்கரையும் தீவுகளும் அமைந்திருப்பதால், இந்த இடத்தை சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக கண்டறிந்து வனத்துறை மூலமாக தமிழ்நாடு பல்லுயிர் பெருக்கம் மற்றும் பசுமையாக்கல் திட்டம் மூலமாக பொதுமக்கள் தீவுகளையும், இயற்கை அழகையும் கண்டு ரசிக்கும்விதமாக பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது.
கோபுரத்தின் மேல் ஏறி நின்று பார்த்தால் கடல் பகுதி, தீவுகள், மாங்குரோவ் காடுகள் உள்ளிட்டவற்றின் அழகை ரசித்து மகிழலாம்.

மேலும் இங்கு கடலுக்குள் மூழ்கி மீன்களை பார்க்கும் ஸ்நோர் கெலிங் உள்ளது. இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு இடையே கடலுக்குள் படகில் சவாரி செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் இங்கு வருகின்றனர். சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செல்வதற்கு பெரியவர்களுக்கு ரூ.200, சிறியவர்கள் 5 வயதிலிருந்து 12 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு நபருக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஸ்நோர்கெலிங் மூலம் கடல் நீருக்குள் மூழ்கி கடலில் உள்ள நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், நண்டு மற்றும், மீன் வகைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை கண்டு ரசிக்கலாம்.

இவ்வளவு சிறப்புமிக்க இந்த சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா தலத்தை காரங்காட்டில் சூழல் மேம்பாட்டு குழு என்று ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதில் செயலாளராக வனத்துறை சரக அலுவலர் உள்ளார். இந்நிர்வாகத்தின் கீழ் வனத்துறையின் வழிகாட்டுதலின்படியே இந்த சுற்றுலா மையம் நடைபெற்று வருகிறது. கமகமக்கும் கடல் உணவுகளுடன் காரங்காடை குடும்ப சகிதம் கண்டு ரசித்து விட்டு செல்லலாம் மக்களே…! வாருங்கள்…!

The post மாங்குரோவ் காடுகளுக்குள் போவோமா படகு சவாரி…? மணமணக்கும் கடல் உணவுகளுடன் appeared first on Dinakaran.

Tags : Mangurov jungle ,RS. Mangalam ,Kamakamakam ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு