×

கோத்தகிரியில் எய்ட் இந்தியா சார்பில் 50 கள ஒருங்கிணைப்பாளர்களுக்கு இன்றும், நாளையும் பயிற்சி பட்டறை

கோத்தகிரி, ஜூன் 25: கோத்தகிரியில், எய்ட் இந்தியா என்கிற லாப நோக்கமற்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தமிழகத்தின் 1000 கிராமங்களில் உள்ள பின்தங்கிய மற்றும் பழங்குடி இன மக்களுக்கு கல்வி, சுகாதாரம், குறைந்த விலையில் வீடுகள் மற்றும் வாழ்வாதாரம் ஆகியவற்றில் கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறது. தமிழ், கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களில் குழந்தைகளின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதில் தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது. மேலும் எய்ட் இந்தியாவின் ‘ஹட்ஸ் டு ஹோம்ஸ்‘ திட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்ட, மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு பாதுகாப்பான வீடுகளை கட்டி கொடுத்து வருகிறது.

ஏழ்மையான குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை விவாதிக்கவும், மாதிரி கிராம திட்டத்தினை நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கவும் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் கோத்தகிரியில் 50 கள ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடைபெறுகிறது. எய்ட் இந்தியாவின் இணை செயலாளர் முனைவர் தாமோதரன் கூறுகையில், ‘‘இந்த பட்டறையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் பழங்குடியின கிராமங்களில் உள்ள முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நோக்கமாக கொண்ட மாதிரி கிராம திட்டத்தை தொடங்குகிறோம். தமிழ்நாட்டின் பல கிராமங்களில் ஏழ்மையான குடும்பங்களுக்கு 550 வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம்.

குழந்தைகளுக்கான கல்வி மையங்கள், தொழில்நுட்பம் சார்ந்த கணிதம், ஆங்கிலம் மற்றும் அறிவியல் வகுப்புகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சுகாதார திட்டங்கள், ஆரோகியத்திற்காக வீட்டு தோட்டம் அமைப்பது போன்ற நல்ல திட்டங்களை பல கிராமங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம் என குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து, எய்ட் இந்தியா அமைப்பின் செயலாளர் முனைவர் பாலாஜி சம்பத் கூறுகையில், ‘‘26 ஆண்டுகளுக்கும் மேலாக பின்தங்கிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த மாதிரி கிராம திட்டத்தின் மூலம், மிகவும் பின்தங்கிய குடும்பங்களை மேம்படுத்தவும், இந்த கிராமங்களில் உள்ள ஏழை மக்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்’’ என நம்புவதாக கூறினர். இந்நிகழ்வில் எய்ட் இந்தியா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

The post கோத்தகிரியில் எய்ட் இந்தியா சார்பில் 50 கள ஒருங்கிணைப்பாளர்களுக்கு இன்றும், நாளையும் பயிற்சி பட்டறை appeared first on Dinakaran.

Tags : Aid India ,Kotagiri ,Tamil Nadu ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்