×

இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்

கோவை, ஜூன் 25: கோவை கொடிசியா அருகே பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் உள்ளது. ஒடிசாவில் உள்ள உலக புகழ்பெற்ற புரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கோவையில் நேற்று இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதற்காக, நேற்று காலை கோவை ராஜவீதியில் உள்ள தேர்முட்டியில் அலங்கரிக்கப்பட்ட தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த தேரில் மதியம் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவியார் எழுந்தருளினர். தொடர்ந்து இஸ்கான் இயக்கத்தை சேர்ந்த பானு சுவாமி மஹராஜ், மற்றும் இயக்கத்தின் மண்டலச்செயளாலர் பக்தி வினோத சுவாமி மஹராஜ் ஆகியோரின் முன்னிலையில் தேரோட்டம் நடைபெற்றது.

இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சென்றனர். தேருக்கு முன்பாக பக்தர்கள் ஆடல், பாடல், கும்மியாட்டம் என நடனமாடியபடி சென்றனர். மேலும், பக்தர்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்று பஜனை பாடியபடி சென்றனர். தேரானது தேர்முட்டியில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர் முட்டியை வந்து அடைந்தது. வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், தேரில் இருந்து மூல விக்ரகங்கள் கோவை கொடிசியாவில் உள்ள கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அங்கு தவத்திரு பக்தி வினோத சுவாமி மகராஜ் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

தொடர்ந்து இன்று மூத்த சந்நியாசிகள் மற்றும் பக்தர்கள் கலந்துகொள்ளும் ஆன்மிக கருத்தரங்கம், ஆன்மிகம் சம்மந்தமான கேள்வி-பதில் நிகழ்ச்சி, சிறப்பு ஆராதனை, நாமசங்கீர்த்தனம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தை நிறுவிய ஆச்சாரியார் பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதரால் முதன்முதலில், இந்தியாவிற்கு வெளியே, அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் கடந்த 1967-ம் ஆண்டு ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் இந்த தேரோட்டம் கிருஷ்ண பக்தர்களால் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Jagannath ,ISKCON ,Coimbatore ,Puri Jagannath Temple ,Odisha ,Dinakaran ,
× RELATED ‘பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்’: பாஜ...