×

கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் நுழையும் மாடுகள் ஏலம் விடப்படும் என அறிவிப்பு: உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் உலாவரும் மாடுகளை பிடித் ஏலம் விடப்படும் என்றும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் அங்காடி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் ‘’இனிமேல் மாடுகளை விடமாட்டோம்’ என்று உரிமையாளர்கள் எழுதி கொடுத்துள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளில் விற்பனையாகாமல் வீணாகும் காய்கறி, பழங்களை மார்க்கெட் வளாகத்தில் கொட்டி வைக்கின்றனர். இவற்றை சாப்பிட அந்த பகுதியில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட பசு மாடுகள், எருமை மாடுகள் வருகின்றன. இவ்வாறு வருகின்ற மாடுகள் திடீரென சண்டை போட்டுக்கொண்டு ஓடும்போது வியாபாரிகள், பொதுமக்கள் பயப்படுகின்றனர். மாடுகள் வேகமாக ஓடும்போது விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகளை நாசம் செய்துவிடுகிறது. இதனால் மார்க்கெட்டில் சுற்றிவரும் மாடுகளை பிடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் அங்காடி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து கடந்த 19ம் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மார்க்கெட்டில் சுற்றிவந்த பசு மாடுகள், எருமை மாடுகளை பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த சமயத்தில் மார்க்கெட்டில் சுற்றிவந்த 70க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து கொண்டு சென்றனர். இதனிடையே மாடுகளை அங்காடி நிர்வாகம் பிடித்து வைத்திருப்பது தெரியவந்ததும் மாட்டின் உரிமையாளர்கள் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தியை சந்தித்து மாடுகளை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘’கடந்த பிப்ரவரி மாதம் முதல் மார்க்கெட்டில் மாடுகள் உள்ளே வருவது தடை செய்யப்பட்டுள்ளது. மாடுகளை உரிமையாளர்கள் தங்களது இடத்தில் கட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இதை மீறி மார்க்கெட்டில் மாடுகளை விட்டால் அந்த மாடுகள் ஏலம் விடப்படும் என்று உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுவித்து இருந்தோம். அப்படியிருந்தும் மறுபடியும் மாடுகளை மார்க்கெட்டில் விடுகின்றனர். இனிமேல் இப்படி செய்தால் அபராதம் விதிக்கப்படும்’ என்றனர். இதன்பிறகு மாட்டின் உரிமையாளர்கள் கூறும்போது, ‘’மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் மாடுகள் வராமல் பார்த்து கொள்கிறோம்’ என்றனர். இதையடுத்து இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காது.

மாடுகளை வீட்டில் கட்டிவைத்து பாதுகாத்து கொள்கிறோம்’ என்று மாட்டின் உரிமையாளர்கள் பாண்டு பத்திரத்தில் எழுதிக் கொடுத்தனர். இதையடுத்து மாடுகளுக்கு 20 ஆயிரம் அபராதம் விதித்ததுடன் மீண்டும் மார்க்கெட்டில் மாடுகள் சுற்றி திரிந்தால் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் சுற்றித் திரியும் மாடுகளால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மார்க்கெட்டில் மாடுகள் வராதபடி கட்டுப்படுத்த அந்தந்த கேட்டில் ஆட்களை நியமித்துள்ளோம். இதனால் கடந்த இரண்டு நாட்களாக மார்க்கெட்டில் மாடுகள் வருவதில்லை. மார்க்கெட்டுக்குள் மாடுகள் வருவதை கண்காணிப்பு கேமரா மூலம் அறிந்து ஒலிபெருக்கி மூலம் ஆட்களை கொண்டு விரட்டி வருகிறோம். மீண்டும் மார்க்கெட்டில் மாடுகள் சுற்றித்திரிந்தால் அபராதம் அளிக்காமல் ஏலம் விடப்படும்’ என்று அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post கோயம்பேடு மார்க்கெட்டுக்குள் நுழையும் மாடுகள் ஏலம் விடப்படும் என அறிவிப்பு: உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Coimbade Market ,Annagar ,Coimbed Market ,Dinakaran ,
× RELATED கோடை வெயில் காரணமாக வரத்து குறைவு;...