×

சிறுத்தை கவ்விய சிறுவன் மீட்கப்பட்ட சம்பவம் திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் இரவில் 200 பக்தர்களுக்கு ஒரு பாதுகாவலர் ஏற்பாடு

*‘கோவிந்தா’ நாமம் உச்சரித்தபடி செல்ல அறிவுறுத்தல்

திருமலை : திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் நடைபாதையின் 7வது மைலில் 3 வயது சிறுவனை நேற்று முன்தினம் சிறுத்தை கவ்வி சென்றது. அப்போது பக்தர்கள் கூச்சலிட்டபடி சென்று சிறுவனை காயங்களுடன் மீட்டனர். தொடர்ந்து சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் சிறுத்தை சிறுவனை கவ்வி சென்ற இடத்தை செயல் அதிகாரி தர்மா நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏழுமலையானை தரிசிக்க வந்தபோது சிறுவனை 2 வயது சிறுத்தை குட்டி கவ்வி சென்றது. சிறுவனுக்கு ஆபத்து ஏதும் இல்லை. சிறுவனை கவ்வி சென்றபோது, ​​பக்தர்கள் கூச்சலிட்டதால் சிறுத்தை சிறுவனை வனப்பகுதியில் சிறிது தூரத்தில் விட்டுச்சென்றது. இந்நிலையில், அலிபிரி கலிகோபுரத்தில் இருந்து நரசிம்மசுவாமி கோயில் வரை சிறுத்தை நடமாட்டம் உள்ளது தெரியவந்துள்ளது.

எனவே அலிபிரி நடைபாதையில் இரவு 7 மணிக்கு மேல் கலிகோபுரத்தில் இருந்து 200 பக்தர்களை கொண்ட குழுவாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் ஒரு பாதுகாவலரும் இருக்க வேண்டும். மேலும், பக்தர்கள் ‘கோவிந்தா’ நாமத்தை உச்சரித்தபடி மலையேற வேண்டும். சிறு குழந்தைகளை குழுவின் நடுவில் வைத்து எச்சரிக்கையாக செல்ல வேண்டும். திருப்பதி மலைபாதை அருகே நடமாடி வரும் சிறுத்தையை பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதற்காக டிரோன் கேமராக்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்தில் மாலை 6 மணி வரையிலும், அலிபிரி வழித்தடத்தில் இரவு 10 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை 6 மணிக்கு மேல் மலைப்பாதை சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்புக்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், முதன்மை பொறியாளர் நாகேஸ்வர ராவ், மாவட்ட வன அலுவலர் சதீஷ், தேவஸ்தான மாவட்ட வன அலுவலர் ஸ்ரீநிவாஸ், வி.ஜி.ஒ. பாலி மற்றும் பலர் உடனிருந்தனர்.

ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை

திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதில் ‘சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் யாரும் தனியாக செல்ல வேண்டாம். பக்தர்கள் தங்களின் பாதுகாப்புக்காக குழுக்களான செல்ல வேண்டும். குழந்தைகளை கீழே விடாமல் தங்கள் கண்காணிப்பில் அழைத்து செல்ல வேண்டும்’ என கூறி வருகின்றனர்.

The post சிறுத்தை கவ்விய சிறுவன் மீட்கப்பட்ட சம்பவம் திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் இரவில் 200 பக்தர்களுக்கு ஒரு பாதுகாவலர் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tirupati Alibiri ,Govinda' Tirumala ,Dinakaran ,
× RELATED இணைந்திருக்கும் தெய்வீக இசை