×

திருப்பதி மலைப்பாதையில் 3 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது.. பக்தர்கள் நிம்மதி!!

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் 3 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், அதோனியிலிருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மலை பாதையில் நேற்று முன்தினம் புறப்பட்டனர். அப்போது, அலிபிரி மலைப்பாதையில் பெற்றோர்கள் முன்னால் நடந்து சென்ற 3 வயதான கவுசிக் என்ற சிறுவனை ஒரு சிறுத்தை கழுத்தை கவ்வியபடி வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது. இதனை கண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்ஐ ரமேஷ் மற்றும் பக்தர்கள் கூச்சலிட்டபடி சிறுத்தையை விரட்டினர். பின்னர், கவுசிக்கின் அழுகுரல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது சிறுத்தை தப்பி ஓடிய நிலையில் சிறுவன் ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

மீட்கப்பட்ட சிறுவனுக்கு பத்மாவதி இருதாலயா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்தை சிறுத்தை கவ்வி சென்றதால் சிறிய தையல்கள் ஆங்காங்கே போடப்பட்டு உள்ளது. சிறுவனின் உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க மொத்தம் 150 சிசிடிவி கேமராக்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோல் சிறுத்தையை பிடிக்க 4 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது. மருத்துவ பரிசோதனைக்கு பின் சிறுத்தையை அடர்வனத்திற்குள் விட வனத்துறையினர் முடிவு எடுத்துள்ளனர்.

The post திருப்பதி மலைப்பாதையில் 3 வயது சிறுவனை கவ்விச் சென்ற சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது.. பக்தர்கள் நிம்மதி!! appeared first on Dinakaran.

Tags : Tirapati hillside ,Tirumalai ,Tirupati hillside ,AP State ,Kornool ,
× RELATED கட்சி தலைவர்களின் கைக்கூலியாக...