×

கட்சி தலைவர்களின் கைக்கூலியாக செயல்பட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்யலாம்; காவல்துறைக்கு ஆந்திர அமைச்சர் எச்சரிக்கை

திருமலை: ஜெகன்மோகன்ரெட்டி மீது பாசம் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சிக்கு உழைக்க செல்லலாம் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் வங்கலபுடி அனிதா விசாகப்பட்டினத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெகன்மோகன் ஆட்சியில் சில காவல்துறை அதிகாரிகள் கட்சி தலைவர்களின் கைக்கூலியாக செயல்பட்டனர். இன்னும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ரத்தம் தங்களுக்குள் ஓடுவது போல் சிலர் நடந்து கொள்கிறார்கள். அவ்வாறு உள்ளவர்கள் இன்னும் ஜெகன்மோகனை நேசிக்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு அந்த கட்சிக்கு சென்றுவிடலாம். சட்டம்-ஒழுங்கு என்று வரும்போது யாரையும் விட வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக பெண்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து விசாகப்பட்டினம் காவல்துறை அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் அனிதா ஆய்வுக்கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் கஞ்சா மற்றும் போதைப்பொருள் மையமாக மாற்றப்பட்டது. குறைந்தபட்சம் காவல் நிலையங்களை பராமரிக்க கூட ஜெகன்மோகன் அரசு நிதி வழங்கவில்லை. கஞ்சா ஒழிப்புக்கு சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும். கஞ்சா தடுப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. மக்களுக்கு நல்லது செய்யும் மனப்பான்மை காவல்துறையில் இருக்கவேண்டும். 3 மாதங்களுக்குள் கஞ்சா தடுப்பு அதிரடிப்படை உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். காவல் துறையில் மிகப்பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

The post கட்சி தலைவர்களின் கைக்கூலியாக செயல்பட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்யலாம்; காவல்துறைக்கு ஆந்திர அமைச்சர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : AP ,minister ,Tirumalai ,Jehanmoganreti ,Akkshi ,interior minister ,State ,Bangalore ,Anita Visakhapatnam ,Jeganmohan ,Dinakaran ,
× RELATED திருப்பதியில் வனவிலங்குகளை விரட்ட...