×

குறைந்தவிலையில் இணையதள வசதி கொடுப்பதால் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

வாஷிங்டன்: குறைந்தவிலையில் இணைய தள வசதி கொடுப்பதால் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று அதிகாலை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். இதற்காக அமெரிக்கா நாடாளுமன்றத்திற்கு சென்ற பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி ஆகியோர் வரவேற்றனர். துணை அதிபர் கமலா ஹாரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர். அதன்பின்னர் அவையில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுகள் செயற்கை நுண்ணறிவு போன்றது. இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இரு நாடுகளும் சிறந்த ஜனநாயக நாடுகள். இந்தியா ஜனநாயகத்தின் தாய். அமெரிக்கா மிகப் பழமையான நாடு என்றால், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. இரு நாடுகளும் ஒன்றாக இணைந்து புதிய எதிர்காலத்தை உருவாக்க முடியும். அமெரிக்காவின் வளர்ச்சியிலும் இந்திய அமெரிக்கர்கள் பெரும் பங்கு வகித்துள்ளனர். இந்தியர்கள் எல்லாத் துறையிலும் புத்திசாலிகள். அமெரிக்கா மற்றும் இந்தியா மீதான அவர்களின் அன்பால், அவர்கள் எங்களை இணைத்துள்ளனர். இன்று இந்தியாவும் அமெரிக்காவும் விண்வெளி, அறிவியல், செமி கண்டக்டர், ஸ்டார்ட் அப்கள், தொழில்நுட்பம், வர்த்தகம், விவசாயம், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றில் ஒன்றாக இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளன. உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. விரைவில் மூன்றாவது பொருளாதார நாடாக இந்தியா மாறும். இந்தியா வளரும்போது உலகமும் வளரும்.

எனவே நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் குறைந்த விலையில் இணைய வசதியை கொடுக்கிறோம். இதன் மூலம் இந்தியாவில் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் இணைய பலனைப் பெறுகின்றனர். உலகம் ஒரு குடும்பம் என்பதை நாங்கள் நம்புகிறோம். சூரிய ஆற்றல் துறையில் நிறைய முன்னேற்றங்களை கண்டுள்ளோம். உக்ரைன் போர் பெரும் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் தற்போது ஐரோப்பாவிற்கு திரும்பியுள்ளது. இது போருக்கான நேரம் அல்ல. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கையை எடுக்க வேண்டும். மும்பை தாக்குதலுக்கு பிறகும், தீவிரவாத அச்சுறுத்தல் நீடிக்கிறது. தீவிரவாதம் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது, அதற்கான நிறுவன அமைப்புகளும் மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி 3 நாட்கள் அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு அங்கிருந்து நேராக எகிப்து சென்றார்.

* மோடி விருந்தில் பங்கேற்ற பிரபலங்கள்

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரைக்கு பின்னர் அரசின் சார்பில் விருந்து வைக்கப்பட்டது. அந்த விருந்தில் இந்திய தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீடா அம்பானி, ஆனந்த் மஹிந்திரா, இந்திய-அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் எம். நைட் ஷியாமலன், பெப்சிகோவின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான இந்திரா நூயி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, சாந்தனு நாராயண், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஆப்பிள் சிஇஓ டிம் குக் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் மனித உரிமை ஆர்வலர் மார்ட்டின் லூதர் கிங் III, டென்னிஸ் ஜாம்பவான் பில்லி ஜீன் கிங், ஆடை வடிவமைப்பாளர் ரால்ப் லாரன், கிராமி விருது வென்ற ஜோசுவா பெல், தொழிலதிபர் பிராங்க் இஸ்லாம், அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வான அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரமிளா ஜெயபால், தானேதர், ரோ கண்ணா, அமி பெரா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். அதோடு அதிபர் பைடனில் குடும்ப உறுப்பினர்கள் ஹண்டர் பைடன், ஆஷ்லே பைடன், ஜேம்ஸ் பைடன் மற்றும் நவோமி பைடன் நீல் ஆகியோரும் விருந்தில் பங்கேற்றனர். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

* முதல் இந்திய பிரதமர்

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் இரண்டு முறை உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார். அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் முதல்முறையாக பிரதமர் மோடி 2016ல் பேசினார்.

* 2 எம்பிக்கள் புறக்கணிப்பு

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் உரையை ஜனநாயக கட்சியின் இரண்டு முஸ்லீம் எம்பிக்களான இல்ஹான் உமர், ரஷிதா ஆகியோர் புறக்கணித்தனர். நாடாளுமன்ற வளாகத்தின் வெளியே மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோர், மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

* கமலா ஹாரிசுக்கு பாராட்டு

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி, “இந்தியாவில் வேரூன்றிய லட்சக்கணக்கானோர் இங்கு உள்ளனர். அவர்களில் சிலர் இந்த அறையில் பெருமையுடன் அமர்ந்திருக்கிறார்கள். எனக்குப் பின்னால் சரித்திரம் படைத்த ஒருவர்(கமலாஹாாிஸ்) இருக்கிறார்’’ என்று புகழ்ந்தார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் மோடிக்கு நேற்று மதிய விருந்து அளித்தனர்.

* 79 முறை மேஜையை

தட்டிய எம்பிக்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரையின் போது, 79 முறை எம்பிக்கள் மேஜை தட்டினர். பல எம்பிக்கள் மோடியுடன் கைகுலுக்கியதுடன், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

ராகுலை விமர்சித்த மோடி

அமெரிக்காவில் மோடியையும், பாஜ தலைமையிலான ஒன்றிய அரசையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராகுல் விமர்சனம் செய்தார். இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். அவர் பேசும்போது, ‘‘உங்களிடையே கருத்துக்கள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றிய விவாதத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியா, அமெரிக்கா இடையேயான பிணைப்பைக் கொண்டாட இன்று நீங்கள் ஒன்றிணைவதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உள்நாட்டில் இருக்கும் போது கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் நம் தேசத்திற்காக பேசும்போது ஒன்றாக வர வேண்டும். இதை செய்ய உங்களால் முடியும் என்று நீங்கள் காட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்’’ என்று மறைமுகமாக ராகுல்காந்தியை விமர்சனம் செய்தார்.

* முதல்முறையாக நிருபர்களின் கேள்வியை எதிர்கொண்ட மோடி

அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது முதன்முறையாக அவர் நிருபர்களின் கேள்வியை எதிர்கொண்டார். இந்தியாவில் சிறுபான்மையினரின், குறிப்பாக முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பேச்சுச் சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கும் ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்த மோடி, ‘இந்திய மக்களிடையே ஜனநாயகம் ஆழமாக உள்ளது. ஜனநாயக நம்பிக்கையுடன், மதம் அல்லது சாதியின் அடிப்படையில் இந்தியா எந்த வகையிலும் பாகுபாடும் காட்டுவதில்லை. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்களது திட்டம்’ என்றார். இன்னொரு கேள்விக்கு பதில் அளித்த மோடி,’ இந்தியர்களின் டிஎன்ஏவில் ஜனநாயகம் உள்ளது. இங்கு பாகுபாடு என்பதே இல்லை’ என்றார்.

* பாகிஸ்தானுக்கு கண்டனம்

இந்தியா, அமெரிக்கா கூட்டறிக்கையில், மும்பை மற்றும் பதன்கோட் தாக்குதல்களின் ஈடுபட்ட குற்றவாளிகளை தண்டிக்குமாறு பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் பைடனும் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்தனர். பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருந்து பயங்கரவாத தாக்குதலை ஏவி விடுவதற்கு பயன்படுத்தப்படுவதை தடுப்பதை உறுதிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

* நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் அமெரிக்கர்கள்

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அரசு விருந்தில் போது பிரதமர் மோடி பேசியதாவது: இன்றைய இந்த அற்புதமான இரவு விருந்து அளித்தற்காக அமெரிக்க அதிபர் பைடனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது வருகையை வெற்றிகரமாக கவனித்துக்கொண்டதற்காக முதல் பெண்மணி ஜில் பைடனுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு நாளும், இந்தியர்களும், அமெரிக்கர்களும் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்கிறார்கள். இந்தியாவில் குழந்தைகள் ஹாலோவீனில் ஸ்பைடர்மேன் ஆகின்றனர். அமெரிக்காவின் இளைஞர்கள் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்காவில் நீண்ட தூரம் வந்துள்ளனர். கிரிக்கெட்டிலும் அமெரிக்காவில் பிரபலமாகி வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற அமெரிக்க அணி தங்களால் இயன்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் வெற்றி பெற நான் வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். அப்போ சாப்டல…

* இப்போ விடமாட்டேன்..

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கடந்த ஏப்ரல் மாதம் தனக்காக நடத்தப்பட்ட இதேபோன்ற அரசு விருந்தின் போது பாடி ஆச்சரியப்படுத்தியதை மோடி குறிப்பிட்ட போது, பைடனும் விருந்தினர்களை பாடும்படி கூறினார். இது பங்கேற்ற விருந்தினர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது. அப்போது மோடி எனக்கும் பாடும் திறமை இருக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறும்போது,’ உங்கள் விருந்தோம்பலில் உங்கள் விருந்தினர்களை பாட வைத்தது எனக்குத் தெரியும். எனக்கும் பாடும் திறமை இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்போது உங்கள் அனைவருக்கும் முன்பாக நானும் பாடியிருக்கலாம். 2014ம் ஆண்டு எனக்கான விருந்தின் போது, ​​நவராத்திரி விரதத்தில் இருந்ததால், என்னால் எதையும் சாப்பிட முடியவில்லை. அப்போது துணை அதிபராக இருந்த பைடன், உண்ணாவிரதத்தின் போது ஏதாவது சாப்பிட முடியுமா என்று அடிக்கடி கவலையுடன் கேட்டது இப்போது நினைவுக்கு வருகிறது. சரி, இன்று நான் அதை ஈடுசெய்கிறேன். எனக்கு உணவளிக்க வேண்டும் என்ற உங்கள் விருப்பம் இன்று நிறைவேறுகிறது’ என்றார்.

 

The post குறைந்தவிலையில் இணையதள வசதி கொடுப்பதால் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது: அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Modi ,US Parliament ,Washington ,India ,U.S. ,Parliamentary ,Pride ,First Dinakaran Meeting ,US ,Parliament ,
× RELATED டிக்டாக் செயலியை தடை செய்வதற்கான...