×

திருப்பதி மலைபாதையில் பெற்றோருடன் நடந்து சென்ற சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தையை பிடிக்க 4 இடத்தில் கூண்டு

திருமலை: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், அதோனியிலிருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க மலை பாதையில் நேற்று முன்தினம் புறப்பட்டனர். அப்போது, அலிபிரி மலைப்பாதையில் பெற்றோர்கள் முன்னால் நடந்து சென்ற 3 வயதான கவுசிக் என்ற சிறுவனை ஒரு சிறுத்தை கழுத்தை கவ்வியபடி வனப்பகுதிக்குள் தூக்கி சென்றது. இதனை கண்ட பெற்றோர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்ஐ ரமேஷ் மற்றும் பக்தர்கள் கூச்சலிட்டபடி சிறுத்தையை விரட்டினர். பின்னர், கவுசிக்கின் அழுகுரல் சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்தபோது சிறுத்தை தப்பி ஓடிய நிலையில் சிறுவன் ரத்த காயங்களுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

மீட்கப்பட்ட சிறுவனுக்கு பத்மாவதி இருதாலயா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கழுத்தை சிறுத்தை கவ்வி சென்றதால் சிறிய தையல்கள் ஆங்காங்கே போடப்பட்டு உள்ளது. சிறுவனின் உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க மொத்தம் 150 சிசிடிவி கேமராக்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சிறுத்தையை பிடிக்க 4 இடங்களில் கூண்டு வைக்கப்படுகிறது. மலைத்தொடரில் 40க்கும் மேற்பட்ட சிறுத்தை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்ள சேஷாச்சல மலைத்தொடரில் 40க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுத்தைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக இரவு நேரத்தில் 11.30 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முக்கிய உற்சவ நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் அனுமதி கிடையாது. இதேபோன்று கடந்த 2008ம் ஆண்டு அலிபிரி மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று நடந்து சென்ற 13 வயது சிறுமியை கடித்து இழுத்தது. இதனையடுத்து அந்த சிறுத்தை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. வாரி மெட்டு மலைப்பாதையில் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோன்று அலிபிரி மலைப்பாதையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

The post திருப்பதி மலைபாதையில் பெற்றோருடன் நடந்து சென்ற சிறுவனை கவ்விச்சென்ற சிறுத்தையை பிடிக்க 4 இடத்தில் கூண்டு appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Adoni, Kurnool district ,Andhra Pradesh ,Dinakaran ,
× RELATED 20 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்