×

மருத்துவமனைக்கு தேசிய அளவிலான என்ஏபிஎச் தரச்சான்று நாட்டிலேயே முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி

திருவண்ணாமலை, ஜூன் 24: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று (என்ஏபிஎச்) வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்த தரச்சான்றை பெறும் முதல் அரசு மருத்துவக் கல்லூரி என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட தகுதிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில், தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்) தரச்சான்று வழங்கி வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு, இந்த ஆண்டு என்ஏபிஎச் தரச்சான்று பெறுவதற்கான முயற்சியில், தமிழ்நாடு அரசு ஈடுபட்டது. இதற்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் கன்னியாகுமரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் இந்த தரச்சான்றினை பெறுவதற்கு விண்ணப்பித்தன.

அதையொட்டி, பல்வேறு நிலைகளில் ஆய்வு குழுவினர் மருத்துவமனைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். அவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்ட குறைபாடுகள் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு மீண்டும் இறுதி கட்ட ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, தேசிய தரச்சான்று பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு என்ஏபிஎச் தரச்சான்று வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக இந்த தரச்சான்றை பெறும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை என்ற சிறப்பை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளது.

இதுகுறித்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அரவிந்தன் கூறியதாவது: நாட்டின் கடைக்கோடி மக்களுக்கும் அடிப்படை மருத்துவ சேவையை சென்று சேர்ப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் சுகாதாரத்துறையில் முன்னோடியாகவும், எடுத்துக்காட்டாகவும் விளங்கும் தமிழ்நாடு, அதில் அடுத்த அடி எடுத்து வைத்துள்ளது. இந்தியாவில் மருத்துவமனையில் கிடைக்கும் சேவைகளின் தரத்தை பரிசோதித்து அதை உறுதி செய்யவும், சான்றளிக்கவும் 2006ல் தேசிய மருத்துவமனை அங்கீகார வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இந்த வாரியம் பல்வேறு பரிசோதனைகளுக்கு பின் மருத்துவமனைகளுக்கு தரச்சான்று வழங்கி வருகிறது. இதுவரை, உயரிய மருத்துவ வசதிகள் கொண்ட தனியார் மருத்துவமனைகள் மட்டுமே இந்த சான்று பெற்று வந்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக அரசு மருத்துவக் கல்லூரிக்கான தரச்சான்றினை, அரசு திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி பெற்றுள்ளது.

இந்த அரிய சிறப்பான அங்கீகாரம் பெற அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் அளித்த தமிழ்நாடு அரசுக்கும், மருத்துவக் கல்வி இயக்குநருக்கும், செயல்படுத்தவும், சாதிக்கவும் துணைநின்ற கண்காணிப்பு அதிகாரி ஆர்.ஜெ.பாலமுருகன், மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம், உதவி கண்காணிப்பாளர் ரீதர், உதவி கண்காணிப்பு அலுவலர் சரவணன், உள்ளுறை மருத்துவ அதகாரி அரவிந்தன், உதவி உள்ளுறை மருத்துவ அலுவலர்கள் யுவராஜன், வனிதா, தர அலுவலர் ஜெய மற்றும் அனைத்து பேராசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சாரா பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறோம். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேசிய அளவிலான தரச்சான்று கிடைத்திருப்பதன் மூலம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. மேலும், இந்த மருத்துவமனை, மாநிலத்தின் மாதிரி அரசு மருத்துவமனையாக தரம் உயரும். இவர் அவர் தெரிவித்தார்.

The post மருத்துவமனைக்கு தேசிய அளவிலான என்ஏபிஎச் தரச்சான்று நாட்டிலேயே முதன்முறையாக வழங்கப்பட்டுள்ளது திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Government Medical College ,Thiruvannamalai ,Government Medical College Hospital ,
× RELATED பெற்றோர் மகிழ்ச்சி அரசு மருத்துவ...