×

(தி.மலை) மீன்களை பிடிப்பதற்காக ஏரி மதகுகள் உடைத்து நீர் வெளியேற்றம் விவசாயிகள் குற்றச்சாட்டு தண்டராம்பட்டு ஒன்றியத்தில்

தண்டராம்பட்டு, ஜூன் 24: தண்டராம்பட்டு பகுதிகளில், மீன்களை பிடிக்க வசதியாக ஏரி மதகுகளை உடைத்து நீர் வெளியேற்றப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பல ஏரிகள் உள்ளன. இதில், சாத்தனூர் அணை இடதுபுற கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் சேர்ப்பாப்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, குங்கிலியநத்தம், தென்கரும்பலூர், கொட்டையூர், சதாகுப்பம், சின்னகல்லப்பாடி, பெரிய கல்லபாடி, பழையனூர், நவம்பட்டு உள்ளிட்ட ஏரிகளுக்கு செல்கின்றன. மேலும், பெரும்பாலான ஏரிகள் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை தேக்கி வைத்து, கோடை காலங்களில் விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஏரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்காகவும் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் பயன்படுகிறது.

இந்நிலையில், தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள ஏரிகளில் பொதுப்பணித்துறை மூலம் மீன் வளர்க்க ஏலம் விடப்படுகிறது. எனவே, பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வளர்ப்பதற்கு ஏரியை குத்தகைக்கு எடுத்து வருகின்றனர். மேலும், ஏரியில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை குத்தகைதாரர்கள் முறைகேடாக வெளியேற்றி வருகின்றனர். குறிப்பாக, வெளியேற்றப்படும் நீரில் மீன்களை பிடித்து விற்பனை செய்ய வேண்டும், அதன் மூலம் லாபம் பெருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குத்தகைதாரர்கள் செயல்படுகின்றனர். இதற்காக ஏரியில் இருக்கும் தண்ணீரை மதகு வழியாகவும், சில ஏரிகளில் உள்ள மதகை உடைத்தும் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த பிப்ரவரி மாதம் சாத்தனூர் அணையில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் அனைத்து ஏரிகளும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தற்போது, குத்தகைதாரர்களின் இதுபோன்ற செயலால் ஏரி நீர் வீணாகி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியுள்ளதாவது: ஏரியில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி தான் நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு பராமரித்து வருகிறோம். ஆனால், ஏரியை குத்தகைக்கு விடுவதன் மூலம் ஏலம் எடுப்பவர்கள் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இதன் மூலம் விவசாய பயிர்கள் சேதம் ஏற்படுவது மட்டுமல்லாமல், தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. பெரும்பாலும் கோடை காலங்களில் தேக்கி வைக்கக்கூடிய தண்ணீர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு மட்டுமல்லாமல் அவ்வப்போது விவசாய பாசனத்திற்கும் தண்ணீர் பயன்படுகிறது. 6 மாதம் பயன்படக்கூடிய தண்ணீரை 2 மாதங்களுக்குள் ஏரியில் உள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றி விடுகின்றனர். இதனால் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதகுகளை உடைத்து தண்ணீரை வெளியேற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post (தி.மலை) மீன்களை பிடிப்பதற்காக ஏரி மதகுகள் உடைத்து நீர் வெளியேற்றம் விவசாயிகள் குற்றச்சாட்டு தண்டராம்பட்டு ஒன்றியத்தில் appeared first on Dinakaran.

Tags : T.Malai ,Thandarampattu Union ,Dandarampattu ,
× RELATED கடந்த ஆண்டு ஒரு கிலோ ₹10 முதல் ₹13 வரை...