×

நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

நெல்லை, ஜூன் 24: பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனித் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 2ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி 4 ரதவீதிகளும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. தென் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் – காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆனித் திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா, இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு 7 மணிக்கு சுவாமி- அம்பாள், பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா நடைபெறுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி – அம்பாள் வீதியுலா நடக்கிறது. மாலை முதல் இரவு வரை நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

8ம் திருநாளான ஜூலை 1ம் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமி நடராஜர் வெள்ளை சாத்தி எழுந்தருளி உட்பிரகாரம் உலா வருதல், 8 மணிக்கு பச்சை சாத்தி எழுந்தருளி திருவீதியுலா, மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதியுலா, இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதியுலா, சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்மன் தங்கக்கிளி வாகனத்திலும் நகர் வீதியுலா நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9ம் நாள் நிகழ்ச்சியாக ஜூலை 2ம் தேதி நடைபெறுகிறது. காலை 3 மணிக்கு மேல் 4 மணிக்குள் சுவாமி, அம்மன் தேரில் எழுந்தருளலும், காலை 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருத்தேர் வடம்பிடித்தலும் நடைபெறுகிறது. தேர் நிலையம் வந்தவுடன் மறுநாள் தீர்த்தவாரி நடக்கிறது.

ஆனித் திருவிழா இன்று துவங்குவதையடுத்து தினமும் ரதவீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தேரோட்ட நாளன்று நெல்லை மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள். இதையொட்டி நேற்று முதலே ரதவீதிகள் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. காந்திமதி அம்பாள் சன்னதி அருகே புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. ரத வீதிகளில் எங்கெங்கு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், கோயிலுக்குள் பாதுகாப்புக்கு போலீசார் நிற்கும் இடங்கள் என பட்டியலிடப்பட்டு போலீசாருக்கு பணிகள் பிரித்து வழங்கப்பட்டது. சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் புறக்காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்போது 4 ரதவீதிகளிலும் 16 சிசிடிவி கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்காலிகமாக 18 கேமராக்கள் பொருத்தப்படுவதுடன், வாட்சிங் டவர்களும் அமைக்கப்படுகிறது. மேலும் தேரோட்டத்தன்று நெல்லை மாநகர் முழுவதும் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கூடுதலாக தென்காசி, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியை மேற்கொள்வர்.

The post நெல்லையப்பர் கோயிலில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : festival of Ani at Nelleyapar Temple ,Nella ,Nelliyapar — Anit festival ,Gandhimati Amphal Temple ,Festival of Nelliyapar Temple ,Dinakaran ,
× RELATED நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது