×

பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கான உலக அளவிலான திறன் போட்டிகள்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், உலக அளவில் திறன் போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்த பள்ளி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக அளவில் மாணவ – மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், பங்கேற்க வருகிற 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிரான்சில் உள்ள லியோன் நகரில் வருகிற 2024ம் ஆண்டு உலக அளவில் திறன் போட்டிகள் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில், பங்கேற்க தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பல்வேறு துறைகளில் உள்ள 55 தொழிற்பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான திறன் போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற 30ம் தேதி கடைசி நாள். 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்த மாணவ – மாணவிகள், இளைஞர்கள், இந்த போட்டிகளில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.

5ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள் தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் தற்போது படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்சாலையில் பணியில் உள்ளவர்கள், குறுகியகால திறன் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். இது தொடர்பான விவரங்களை மேற்கண்ட இணையதளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம். இதுகுறித்து மேலும் விவரங்களை பெற காஞ்சிபுரம் உதவி இயக்குநர், திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி (04429894560) மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கான உலக அளவிலான திறன் போட்டிகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Global Skills Competitions for School Students ,Kanchipuram ,Global Skill Competitions for ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...