×

உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை ஆணை: அமைச்சர் வழங்கினார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் கூட்டரங்கில் கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், பாலாஜி, பாபு ஆகியோர் முன்னிலையில், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொதுமக்களிடம் 311 கோரிக்கை மனுக்களை பெற்றார். அதனை தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தொழில் துவங்க வங்கிக் கடன் மானிய தொகையாக 8 பயனாளிகளுக்கு ரூ.1.91 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், திருப்போரூர் பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்த முகேஷ் என்பவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்திற்கான காசோலையையும், பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைக்கான ஆணைகளையும் அமைச்சர் வழங்கினார்.

பின்னர், 2023-2024ம் ஆண்டிற்கு அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மை குழு தலைவர், ஊராட்சி தலைவர் ஆகியோருக்கு அமைச்சர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். செங்கல்பட்டு நகராட்சிக்கு 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் பேட்டரியால் இயங்கக்கூடிய குப்பை சேகரிக்கும் 27 வாகனங்கள் ரூ.54 இலட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டன. அதில், 10 வாகனங்களை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் ரவி மீனா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் இந்துபாலா, மகளிர் திட்ட இயக்குநர் மணி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாகிதா பர்வின், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அரசு, திருக்கழுக்குன்றம் முன்னாள் எம்எல்ஏ தமிழ்மணி, காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் உதயா கருணாகரன், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி, லத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சுப்புலட்சுமி பாபு, மறைமலைநகர் நகர்மன்றத் தலைவர் சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை ஆணை: அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Kanchipuram ,Selvam ,Varalakshmi Madhusudhanan ,Balaji ,Babu ,Collector ,Rahul Nath ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்