×

சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்ந்தால் பொறியியல் மாணவர்கள் நோபல்பரிசு கூட பெற முடியும்: அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் கருத்து

சென்னை: பொறியியல் மாணவர்கள் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்ந்தால் நோபல் பரிசு கூட பெற முடியும் என அண்ணா பல்கலை கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் ‘தமிழரின் கட்டிடக்கலை தொழில்நுட்பம்’ எனும் தலைப்பிலான இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.

கருத்தரங்கை தொடங்கி வைத்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் வேல்ராஜ் பேசியதாவது: \\”கி.மு 5 முதல் – கி.பி 5 வரையிலான காலகட்டத்தில் தமிழ் இலக்கியங்கள் வளர்ச்சி பெற்றன. பின்னர் பாண்டியர்கள் தமிழை வளர்த்தனர், சோழர்கள் கட்டிடக்கலையை வளர்த்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நமது பெருமையை, வளர்ச்சியை இழந்துவிட்டோம். தமிழர்கள் பொறியியல் துறையில் பெரியளவில் வளர்ச்சி பெற்றவர்களாக இருந்திருக்கலாம், ஆனால் கடந்த 200 ஆண்டில் பொறியியல் துறையின் வளர்ச்சி அழிவைச் சந்தித்துள்ளது. நிலையான வளர்ச்சி இல்லை. தஞ்சை பெரிய கோயிலில் 80 டன் எடை கொண்ட ஒரு கல்லை, 216 அடி உயரத்தில் வைத்துள்ளனர். கல்லணை குறித்து பலரும் இன்றும் ஆராய்ந்து வருகின்றனர். கட்டுமான துறையின் வளர்ச்சியை நம் வீடுகளின் தாழ்வாரம், மாடங்கள் மூலமே அறிந்து கொள்ள முடியும்.

அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்ப நம் முன்னோர் வீடுகளை கட்டினர். மாணவர்கள் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதை ஆராய்ந்தால் நோபல் பரிசு கூட பெற முடியும். கட்டிடக் கலை குறித்தும், கப்பல் கட்டுமானம் குறித்தும் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் கூறப்பட்டுள்ளன. தமிழர்களின் பெருமையை பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு தெரிய வைப்பதற்காகவே தமிழர் மரபு, தமிழரும் தொழில்நுட்பமும் என்ற தமிழ்வழிப் பாடங்கள் பொறியியல் பாடப்பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. நம் முன்னோர்களின் பலம்தான் நமது பலம்.

கால்குலேட்டர் போன்ற தொழில்நுட்பங்கள் நமது அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டன. பொறியியல் குறித்த அடிப்படை புரிதல் இல்லாமலேயே சாப்ட்வேர்களை பயன்படுத்தி பொறியாளர்கள் கட்டிடங்களை கட்டும் நிலை தற்போது உருவாகிவிட்டது. சாப்ட்வேர்களை பயன்படுத்த முடியாத சூழல் வரும்போது மீண்டும் சங்க இலக்கியங்களை ஆராய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ் பல்கலைக் கழக துணைவேந்தர் திருவள்ளுவன், அமெரிக்கா புளோரிடா தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் சேஷா சீனிவாசன், தமிழ் பல்கலை கழக கட்டிடக் கலைத்துறை தலைவர் திலகவதி, அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப மையத்தின் இயக்குநர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

The post சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்ந்தால் பொறியியல் மாணவர்கள் நோபல்பரிசு கூட பெற முடியும்: அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் கருத்து appeared first on Dinakaran.

Tags : Anna University ,Vice Chancellor ,Velraj ,Chennai ,Institute of Engineering Students ,Anna ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...