×

திருப்பதி மலைப்பாதையில் அதிர்ச்சி; 200 மீட்டர் வனப்பகுதிக்குள் சிறுவனை கவ்வி உயிரோடு விட்டுச்சென்ற சிறுத்தை: ஏழுமலையான் அருளால் தப்பியதாக பெற்றோர், பக்தர்கள் நெகிழ்ச்சி

திருமலை: திருப்பதி மலைப்பாதையில் பெற்றோருடன் சென்ற சிறுவனை கவ்வி சென்ற சிறுத்தை சுமார் 200 மீட்டர் வனப்பகுதிக்குள் உயிரோடு விட்டுவிட்டுசென்றது. ஏழுமலையானின் அருளால் தங்கள் குழந்தை தப்பியதாக பெற்றோர் மற்றும் பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடைபாைதையாக வரும் பக்தர்கள், வாரிமெட்டு மற்றும் அலிபிரி மலைப்பாதை வழியாக செல்வது வழக்கம். அதேபோல் நேற்றிரவு 9.30 மணியளவில் ஏராளமான பக்தர்கள் அலிபிரி மலைப்பாதையில் நடந்துசென்றனர். இதேபோல் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆதோனி பகுதியை சேர்ந்த தம்பதியினர் தங்களது 3 வயது மகன் கவுசிக்குடன் நேற்றிரவு சென்றனர். இவர்களுடன் சிறுவனின் தாத்தாவும் வந்தார். 7வது மைலில் நடந்து சென்றபோது வனப்பகுதியில் இருந்து பாய்ந்து வந்த சிறுத்தை, சிறுவன் கவுசிக்கை கவ்விக்கொண்டு ஓடியது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், தாத்தா மற்றும் பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் சிறுவனுடன் சிறுத்தை கும்மிருட்டில் மாயமானது. இதனால் செய்வதறியாமல் திகைத்த சிறுவனின் பெற்றோர், போலீசார் மற்றும் பக்தர்கள் தங்கள் செல்போன்களில் டார்ச் அடித்தபடி வனப்பகுதிக்குள் தேடிச்சென்றனர். அப்போது சிறுவனின் அழுகுரல் கேட்டது. சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள புதர் அருகே சிறுவன் ரத்த காயத்துடன் கதறி அழுதுகொண்டிருந்தான். உடனடியாக அங்கு விரைந்து சென்று சிறுவனை மீட்டு ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  அதற்குள் தேவஸ்தான செயல் அலுவலர் தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்தனர். பின்னர் திருப்பதியில் உள்ள பத்மாவதி இருதாலயா மருத்துவமனையில் மருத்துவக்குழுவை தயார் நிலையில் வைக்கும்படி செயல் அலுவலர் உத்தரவிட்டார். அனைத்து துறை டாக்டர்களும் அங்கு தயார் நிலையில் இருந்தனர்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை அழைத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுத்தை கவ்விச்சென்றதில் சிறுவனின் கழுத்து, முகம், தலை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம்வழிந்தது. அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிறுவனின் கழுத்துப்பகுதியில் சிறிய ஆபரேஷன் செய்யப்பட்டது. தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கும்மிருட்டில் சிறுவனை சிறுத்தை கவ்விச்சென்று 200 மீட்டர் வனப்பகுதிக்குள் விட்டுச்சென்றுள்ளது. ஏழுமலையான் அருளால் தங்கள் மகன் தப்பினான் என்று பெற்றோர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அலிபிரி மலைப்பாதையில் கடந்த 2008ம் ஆண்டும் இதேபோன்று 13 வயது சிறுமியை சிறுத்தை கவ்விச்சென்று பின்னர் விடுவித்தது குறிப்பிடத்தக்கது.

அலிபிரியில் இரவில் பாதயாத்திரைக்கு தடை?
இதனிடையே நள்ளிரவு மருத்துவமனை வளாகத்தில் திருப்பதி மாவட்ட வன அலுவலர் சதிஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அலிபிரி மலைப்பாதையில் தனியாக செல்லாமல் கூட்டமாக செல்லவேண்டும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிறுவர்களை மிகுந்த கண்காணிப்புடன் அழைத்துச்செல்ல வேண்டும். சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூடுதல் வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஏற்கனவே அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டதால் சிறுவன் எளிதில் மீட்கப்பட்டான். அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார். இந்நிலையில் திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் இரவு நேரத்தில் பக்தர்கள் செல்ல தடை விதிக்க தேவஸ்தானம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விரைவில் தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post திருப்பதி மலைப்பாதையில் அதிர்ச்சி; 200 மீட்டர் வனப்பகுதிக்குள் சிறுவனை கவ்வி உயிரோடு விட்டுச்சென்ற சிறுத்தை: ஏழுமலையான் அருளால் தப்பியதாக பெற்றோர், பக்தர்கள் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tirupati hillside ,Khagvi ,Elemalayan ,Thirumalai ,Tirupati Mountainside ,Kadvi ,
× RELATED சமூக வலைத்தளங்கள் மூலம் அவதூறு...