×

சங்கையே பூஜித்து வணங்குவோம்!: சங்காபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யம் நிச்சயம்..!!

மகாவிஷ்ணுவை நினைத்து சங்கு தீர்த்தம் விட்டு ஸ்லோகம் சொல்லி வழிபட்டுப் பிரார்த்தனைகள் மேற்கொண்டு வந்தால், இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும். எடுத்த காரியங்களில் இருந்துவந்த தடைகள் அனைத்தும் நீங்கி, அனைத்தும் வெற்றியைத் தந்தருளும். நம் வழிபாடுகளிலும் சடங்குகளிலும் மிக முக்கியமாக இருப்பவற்றில் சங்கு தனித்ததான இடம் பெற்றிருக்கிறது. நம்மில் பலரும் சங்கு என்பது, அலங்கரிக்கும் பொருளாகவே நினைத்து வீட்டில் வைத்திருக்கிறோம். உண்மையில், சங்கு தெய்வீக குணம் கொண்டது. அதன் சக்தி அளவிட முடியாதது. சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பார்கள். அதேபோல், சங்கு நம் வீட்டில் இருந்தாலே சகல சந்தோஷங்களும் ஐஸ்வர்ய நிகழ்வுகளும் மங்கல காரியங்களும் நடந்தேறும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

சங்கு என்பதன் தன்மை என்ன, அதன் குணம் என்ன என்று தெரியாமலேயே, நாம் சரிவர அறிந்துகொள்ளாமலேயே வீட்டை அலங்கரிக்கும் பொருட்களில் ஒன்றாக வைத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் சிறிய அளவிலான சங்கு கொண்ட கீசெயினை வைத்திருக்கிறார்கள். பூஜையறையில் வெள்ளை வெளேரென இருக்கிற சங்கு வைத்திருப்பவர்களும் உண்டு. அந்தச் சங்கைக் கொண்டு, சங்கின் பரிபூரண சக்தியை உணர்ந்தவர்கள், பூஜையறையில் உள்ள சின்னச்சின்ன விக்கிரகங்களுக்கெல்லாம் சங்கைக் கொண்டு அபிஷேகம் செய்வார்கள்.

சங்கு வைத்திருப்பதே நமக்கும் நம் இல்லத்துக்கும் விசேஷமானதுதான். முறையாக சங்கு கொண்டு இறைத் திருமேனியை அபிஷேகிப்பது இன்னும் பல மகத்துவங்களை நமக்கு வழங்கக் கூடியது’’ என்கிறார் பாஸ்கர குருக்கள். சங்கு என்பது வீரத்தைக் குறிக்கும். சங்கு என்பது ஆரம்பத்தை, அதாவது ஒரு காரியம் தொடங்குவதைக் குறிக்கும். சங்கு என்பது காரிய வெற்றியைக் குறிக்கும். சங்கு என்பது கலைகளைக் குறிக்கும். சங்கு என்பது கல்வியைக் குறிக்கும். சங்கு என்பது அமைதியைக் குறிக்கும். சங்கு என்பது பக்தியைக் குறிக்கும். சங்கு என்பது செல்வத்தைக் குறிக்கும் என்று தர்ம சாஸ்திரம் சங்கின் பெருமைகளை ஸ்லோகமாக விளக்கியுள்ளது.

இத்தனை மகத்துவம் கொண்ட சங்கைத்தான் மகாவிஷ்ணு தன் திருக்கரத்தில் ஏந்தியபடி சேவை சாதிக்கிறார். சங்கு கொண்டு சங்கநாதம் எழுப்பினார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். இதையே ’பாஞ்சஜன்யம்’ என விவரிக்கிறது மகாபாரதம். அதுமட்டுமா? பகவான் ஸ்ரீகிருஷ்ணர், அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து, குருக்ஷேத்திர யுத்தத்தை நிகழ்த்திய போது, பாஞ்சஜன்யம் எழுப்பித்தான் யுத்தத்தை அறிவித்தார் என்கிறது மகாபாரதம்.

ஒரு கரத்தில் சங்கு, இன்னொரு கரத்தில் சக்கரம் என வைத்துக் கொண்டிருப்பதால்தான் பெருமாளுக்கு, சங்கு சக்கரதாரி எனும் திருநாமமும் அமைந்தது. சங்கு சக்கரதாரியாக பெருமாள் காட்சி தரும் அழகை வேளுக்குடி கிருஷ்ணன் முதலான உபந்யாசகர்கள் ரசித்து ரசித்து விவரித்திருக்கிறார்கள். ஆகவே பெருமாளின் திருக்கரத்தில் ஏந்தியிருக்கும் சங்கு, நம் வீட்டுப் பூஜையறையிலும் நம் வழிபாட்டிலும் இருப்பது ரொம்பவே சிறப்பு வாய்ந்தது. இன்னொரு விஷயம்… சிவனாருக்கும் சங்காபிஷேகத்துக்கும் தொடர்பு உண்டு. பெருமாளுக்கு சங்கு கொண்டு அபிஷேகம் செய்வது சகல செல்வங்களைத் தரும்.

அதேபோல், கார்த்திகை மாதத்தில், சோமவாரம் என்று சொல்லப்படும் திங்கட்கிழமைகளில், சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் விமரிசையாக நடந்தேறும். பொதுவாகவே, நம் வீட்டில் எந்த விக்கிரகத் திருமேனி இருந்தாலும், அந்த இறையுருவத்தை, சங்கு கொண்டு நீரால் அபிஷேகம் செய்வதும், சங்கில் பால் நிரப்பி அபிஷேகிப்பதும் எண்ணற்ற பலன்களைத் தந்தருளும்!

வீட்டில் விளக்கேற்றி, பெருமாள் திருவுருவப் படங்களுக்கோ சிலைக்கோ துளசி மாலை சார்த்துவோம். கிழக்குப் பார்த்து அமர்ந்துகொண்டு, சங்கில் நீர் நிரப்பி, பெருமாள் சிலை இருந்தால் எதிரில் வைத்துக்கொண்டு, 108 முறை இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சங்கால் அபிஷேகம் செய்யலாம்.

அந்த ஸ்லோகம்…

ஓம் சுதர்சனாய நமஹ,

ஓம் மஹா விஷ்ணவே நமஹ

– இந்த மந்திரத்தைச் சொல்லுவோம். ஒவ்வொரு முறை சொல்லிவிட்டும் சங்கில் இருந்து பெருமாளுக்கு நீராலோ அல்லது பாலிலோ அபிஷேகம் செய்யலாம். .

நம் வீட்டில், பெருமாள் விக்கிரகத் திருமேனியாக இல்லையென்றாலும் கூட, தாம்பாளத்தை நன்றாக அலம்பி எடுத்து வைத்துக்கொண்டு, அதில் துளசியை நடுவே இட்டு நிரப்பிக்கொள்ளலாம். அந்த துளசியையே மகாவிஷ்ணுவாக பாவனை செய்து, சங்கால் அபிஷேகித்து, இந்த ஸ்லோகத்தை ஜபித்து வேண்டிக்கொள்ளலாம். இதுவரை இருந்த பொருளாதாரக் கஷ்டங்களும் நஷ்டங்களும் விலகும். வீட்டில் தடைபட்டிருந்த மங்கல காரியங்கள் விரைவில் நடந்தேறும். சகல ஐஸ்வர்யங்களையும் தரும் சங்கின் பெருமையை உணர்ந்து, முறையே சங்கு கொண்டு பூஜிப்போம். சங்கையே பூஜித்து வணங்குவோம்.

The post சங்கையே பூஜித்து வணங்குவோம்!: சங்காபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யம் நிச்சயம்..!! appeared first on Dinakaran.

Tags : Sangu Tirtham ,Aiswaryam ,
× RELATED வானில் ஓர் உரையாடல்