×

அடுத்தடுத்த புகார்கள் எதிரொலி ஒகேனக்கல் மீன்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

*92 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்

ஒகேனக்கல் : பொதுமக்களின் அடுத்தடுத்த புகார்களின் எதிரொலியாக, மீன்வளம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், நேற்று ஒகேனக்கல்லில் உள்ள மீன்கடைளில் அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் விற்பனைக்கு வைத்திருந்த 92 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்து அழித்தனர். தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள், காவிரி ஆறு மற்றும் அருவிகளில் குளிப்பது, பரிசல் சவாரி செய்வதோடு, இங்குள்ள கடைகளில் மீன்களை வாங்கி சுவைத்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக, ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள மீன்கடைகளில், அழுகிய மற்றும் பழைய மீன்களை விற்பனை செய்து வருவதாகவும், இவற்றை சாப்பிடுபவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, கலெக்டர் சாந்தியின் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா தலைமையில், பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை அலுவலர் வேலுச்சாமி மற்றும் மீன்வளத்துறை பணியாளர்கள் குழுவினர், நேற்று ஒகேனக்கல்லில் உள்ள மீன் விற்பனை கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அவர்கள் மீன்கள் மீது பார்மலின் பூசப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வுக்கு உட்படுத்தினர்.

அதில் மீன்களில் எவ்வித பார்மலினும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், ஒரு சில கடைகளில், அழுகிய மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 92 கிலோ அழுகிய மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், குழி தோண்டி கொட்டி மீன்களை அழித்தனர். மேலும், அதனை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், மீண்டும் இதுபோல் அழுகிய மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

The post அடுத்தடுத்த புகார்கள் எதிரொலி ஒகேனக்கல் மீன்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Okanagan ,
× RELATED மேட்டூர் நீர்மட்டம் தொடர்ந்து சரிவு