×

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது பாவூர்சத்திரத்தில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

*ஆடுகளை வாங்க பெண்களும் குவிந்தனர்

பாவூர்சத்திரம் : பக்ரீத் பண்டிகையையொட்டி பாவூர்சத்திரம் வாரச் சந்தையில் ரூ.1 கோடியில் ஆடு விற்பனை நடைபெற்றது. ரூ.3 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை ஆடுகள் தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு ஆடுகளை வாங்குவதற்கு ஆண்களை போன்று பெண்களும் ஏராளமானோர் குவிந்தனர்.இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற 29ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம்.

இதற்காக தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இயங்கி வரும் ஆட்டு சந்தையில் நேற்று காலை முதலே பொதுமக்கள் குவிய தொடங்கினர். பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கீழப்பாவூர், மேலப்பாவூர், குறும்பலாப்பேரி, மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, ஆவுடையானூர், கல்லூரணி, அரியப்புரம், ராமச்சந்திரபட்டினம், மேலமெஞ்ஞானபுரம், திப்பணம்பட்டி, கொண்டலூர், அடைக்கலப்பட்டணம், சுரண்டை, வெள்ளகால், ராஜபாண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் ஆடுகள் மற்றும் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

ராஜபாளையம், தென்காசி, பொட்டல்புதூர், கடையம், வீராணம், புளியங்குடி, சிவகிரி, வாசுதேவநல்லூர், மேலப்பாவூர், சுரண்டை, மேலப்பாளையம், கடையநல்லூர், சங்கரன்கோவில், பத்தமடை, கேரளாவின் தென்மலை, புனலூர், பத்தினம்திட்டா, கொட்டாரக்கரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து அதிக அளவில் வியாபாரிகளும், இஸ்லாமியர்களும் போட்டி போட்டு கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர்.

ஆடுகள் ரூ.3 ஆயிரத்தில் தொடங்கி தரத்திற்கேற்ப ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த ஆடுகளை வாங்குவதற்கு வழக்கமான ஆண்கள் மட்டுமே வருவார்கள். ஆனால், நேற்று சந்தையில் பெண்களும் ஆடுகளை வாங்குவதற்காக வந்திருந்தனர். நேற்றைய சந்தையில் மாடுகளின் விற்பனையும் அதிகளவில் காணப்பட்டது.

குறிப்பாக காங்கேயம், ஓசூர், ஓட்டன், கிர் இனகாளைகள், நாட்டு ரக காளைகள், எருமைகள் அதிக அளவில் கொண்டுவரப்பட்டு விற்பனையானது. பாவூர்சத்திரம் அரசு சந்தையில் நேற்று மட்டும் ரூ.1 கோடி வரை ஆடுகள் மற்றும் மாடுகள் விற்பனையாகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு களைகட்டியது பாவூர்சத்திரத்தில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Bhavoorchatra ,Bakrit festival ,Bhavoorchatram ,
× RELATED பாவூர்சத்திரத்தில் நடுவழியில்...