×

800 கி.மீ. பயணித்து பூம்புகார் வங்கக் கடலில் கலந்த காவிரி தண்ணீர்

*சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்

சீர்காழி : காவிரி தண்ணீர் 800 கி.மீ பயணித்த காவிரி தண்ணீர் பூம்புகார் வங்கக்கடலில் கலந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ம் தேதி டெல்டா மாவட்டத்துக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். ஆனால் அணையில் இருக்கும் நீர் இருப்பை பொருத்தும், அணைக்கான நீர்வரத்து பொருத்தும் ஜூன் 12ம் தேதி அல்லது காலதாமதமாக தண்ணீர் திறந்து விடப்படும். இந்தாண்டு போதுமான நீர் இருப்பு இருந்ததால் கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டத்துக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையை அடைந்தது. பின்னர் அங்கிருந்து கடந்த 16ம் தேதி பாசனத்துக்காக காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. 20ம்தேதி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான முதல் கதவணை உள்ள திருவாலங்காடு காவிரி, விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் உள்ள நீர் தேக்கிக்கு தண்ணீர் வந்தடைந்தது. அங்கு பொதுப்பணித்துறையினர் சிறப்பு பூஜைகள் செய்து விநாடிக்கு 782 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட்டனர். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி, காவேரி நீரை மலர், நவதானியங்கள் தூவி வரவேற்றார்.

மேட்டூர் அணை விதிப்படி, காவிரி கடலுடன் கலக்கும் பூம்புகாருக்கு முன் மேலையூர் கடைமடை கதவணை பகுதிக்கு காவிரி நீர் சென்று சேர்ந்தவுடன் மற்ற கிளை ஆறுகள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரித்து அனுப்ப வேண்டும். இதன்படி 21ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து இந்த தண்ணீர் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி அருகே பூம்புகார் கடலில் கலந்தது. இந்த காவிரி தண்ணீர் கடலில் கலந்ததை பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி தொடங்கி 800 கி.மீ. பயணித்து பூம்புகார் வங்கக்கடலில் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் முன்கூட்டியே கடைமடை பகுதிக்கு வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post 800 கி.மீ. பயணித்து பூம்புகார் வங்கக் கடலில் கலந்த காவிரி தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Bay of Bengal ,Sirkazi ,Bengal Sea ,Dinakaran ,
× RELATED வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த...