×

கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருமயம் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையில் விதிமீறலா? மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: கட்டாய கல்வி சட்ட மாணவர் சேர்க்கையில் விதிமீறல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ராயவரத்தை சேர்ந்த அன்புராஜா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொருளாதாரரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு கல்வி வழங்கிடும் வகையில் கட்டாய கல்வி உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் கடந்த 2013ம் ஆண்டு தமிழ்நாட்டில் அமலானது. இந்தச் சட்டத்தின் கீழ், தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். இதன்படி திருமயம் தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்காக என் மகளுக்கு விண்ணப்பித்தேன்.

என் மகளின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு, சேர்க்கை கட்டணம் ஆயிரம் ரூபாய் செலுத்துமாறு கூறினர். 33 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இட ஒதுக்கீட்டின்படி 9 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட தொலைவிற்குள் இல்லையெனக் கூறி திடீரென என் மகளின் சேர்க்கையை ரத்து செய்தனர். என்னை விட அதிக தொலைவில் உள்ளவர்களுக்கு சீட் ஒதுக்கியுள்ளனர். சேர்க்கை கட்டணம் வசூலித்த நிலையில் திடீரென நிராகரித்துள்ளனர். சேர்க்கைக்கான விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, விதிகளை மீறி செயல்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். மனுதாரர் வக்கீல் ஏ.ரமேஷ் ஆஜராகி, ‘‘தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் வழங்கி முறைகேட்டில் ஈடுபடும்விதமாக முதலில் தேர்வு செய்யப்பட்ட மனுதாரரை நீக்கியுள்ளனர்’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘25 சதவீத இடங்களை நிரப்ப என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டது என்பது தொடர்பாக மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குநர், தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான தலைமை தொடர்பு அலுவலர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 3க்கு தள்ளி வைத்தார்.

The post கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருமயம் தனியார் பள்ளி மாணவர் சேர்க்கையில் விதிமீறலா? மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MATRIC ,Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை