×

ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி ஹலோ போலீஸ் ஸ்டேஷனா…. எப்ஐஆர் எப்ப சார் போடுவீங்க?: பிடிக்க சென்ற எஸ்.ஐ, 2 ஏட்டுகளை வெட்டிய வாலிபர் கைது

களக்காடு: நெல்லை – நாகர்கோவில் ரயில்வே வழித்தடத்தில் நாங்குநேரி அருகே நெடுங்குளத்தில் ரயில்வே கேட் உள்ளது. இங்கு விஷ்ணு என்பவர் கேட்கீப்பராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை 2 மணியளவில் விஷ்ணு பணியில் இருந்தபோது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் பைக்கில் வந்து, அத்துமீறி கேட் கீப்பர் அறைக்குள் புகுந்து, அறையில் இருந்த 2 தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். பாட்டிலில் கொண்டு வந்த பெட்ரோலை அறையில் ஊற்றி தீ வைக்கவும் முயற்சி செய்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக தீ பற்றாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன் பின் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மூன்றடைப்பு போலீஸ் நிலையத்திற்கு நேற்று வாலிபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, ‘ஹலோ போலீஸ் ஸ்டேஷனா… நெடுங்குளம் ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி செய்தது நான் தான். இது தொடர்பா எப்ஐஆர் போட்டாச்சா?’ என்று கேட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே புளியங்குளத்தை சேர்ந்த பிச்சைக்கண்ணு (25) என்பதும், அவர் கடந்த 19ம் தேதி இரவில் ஒரு பெண்ணுடன் பைக்கில் நெடுங்குளம் ரயில்வே கேட் வழியாக வந்தபோது ரயில் வந்ததால், கேட் மூடப்பட்டது. பிச்சைக்கண்னு கேட்டை திறக்ககோரி ரகளையில் ஈடுபட்டுள்ளார். எனினும் ரயில் சென்ற பிறகே கேட் திறக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் நண்பருடன் வந்து கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி செய்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், கருங்கடல் பகுதியில் பதுங்கியிருந்த பிச்சைக்கண்ணனை பிடிக்க சென்ற எஸ்ஐ, 2 ஏட்டுகளை அவர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிச்சைக்கண்ணனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

The post ரயில்வே கேட் கீப்பர் அறைக்கு தீ வைக்க முயற்சி ஹலோ போலீஸ் ஸ்டேஷனா…. எப்ஐஆர் எப்ப சார் போடுவீங்க?: பிடிக்க சென்ற எஸ்.ஐ, 2 ஏட்டுகளை வெட்டிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : SI ,Kalakkadu ,Nedungulam ,Nanguneri ,Nellai – Nagercoil ,Vishnu ,police station ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...