×

தம்பி வாங்கிய கடனுக்காக சென்னையில் இருந்து கடத்தப்பட்ட ராப் இசை பாடகர் புதுகையில் மீட்பு: சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசார்

சென்னை: கோயம்புத்தூரை சேர்ந்தவர் தேவானந்த்(29). ராப் இசை கலைஞரான இவரது சகோதரர் மதுரையை சேர்ந்த சிரஞ்சீவி. இவர், தொழில் சம்மந்தமாக 5 பேரிடம் ரூ.2.5 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் திடீர் தலைமறைவாகி விட்டார். இதனால் பணம் கொடுத்தவர்கள் சிரஞ்சீவியை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு தேவானந்த், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்னை திருவேற்காட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல், அவரை கத்தி முனையில் கடத்தி சென்றது.

இது குறித்து அவரது நண்பர்கள் திருவேற்காடு காவல்நிலைத்திற்கு தகவல் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தியதில், புதுக்கோட்டைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காரை பின் தொடர்ந்த சென்ற தனிப்படையினர், புதுகை எஸ்.பி வந்திதா பாண்டேவுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் நேற்று மாலை புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவ்வழியாக வந்த 2 கார்களை நிறுத்த முயன்றபோது அந்த கார்கள் நிற்காமல் அதிவேகமாக சென்றன.

இதையடுத்து எஸ்எஸ்ஐ சின்னையா மற்றும் காவலர் ராஜராஜன் ஆகியோர் பைக்கில் அந்த கார்களை விரட்டினர். பின்னர் 1 கி.மீ தொலைவில் மாலை 5 மணியளவில் கார்களை மடக்கி நிறுத்தினர். இதனையடுத்து பின் தொடர்ந்து வந்த சென்னை போலீசார் மற்றும் பொன்னமராவதி போலீசார் காரில் இருந்த தேவானந்த்தை மீட்டனர். கடத்தல்காரர்கள் 5 பேரை பொன்னமராவதி காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி எட்டயபுரத்தை சேர்ந்த சந்திரசேகரன் (31), முத்துப்பாண்டி(45), முத்து(36), காஞ்சிபுரம் கூடுவாஞ்சேரி சாமிநாதன்(47), சென்னை பொழிச்சலூர் கருப்பசாமி(31) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த பொன்னமராவதி போலீசார் சென்னை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

The post தம்பி வாங்கிய கடனுக்காக சென்னையில் இருந்து கடத்தப்பட்ட ராப் இசை பாடகர் புதுகையில் மீட்பு: சினிமா பாணியில் துரத்தி பிடித்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Devanand ,Coimbutore ,Siranjeevi ,Madurai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...