×

விடுதலையானதும் மற்றொரு வழக்கில் கைது செய்ய முயன்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிய பலே திருடன்: செங்கை சிறை வளாகத்தில் பரபரப்பு

செங்கல்பட்டு: விடுதலையானதும் மற்றொரு வழக்கில் கைது செய்ய முயன்றபோது போலீசாரின் பிடியிலிருந்து தப்பிய பலே திருடனால் செங்கல்பட்டு சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இவர், 200 லேப்டாப்புகளை திருடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (32). இவர் சென்னையில் பல ஆண்டுகளாக தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி ஊழியர் தங்கும் விடுதி ஆகிய இடங்களில் உள்ள மடிக்கணினியை திருடுவதே தனது தொழிலாக வைத்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி பகுதியில் மடிக்கணினி திருடிய வழக்கில் கேளம்பாக்கம் போலீசார் மோகனை கைது செய்து செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நேற்று மாலை செங்கல்பட்டு சிறையில் உள்ள மோகனை ஜாமீனில் விடுவிக்க வழக்கறிஞர் வந்தபோது கேளம்பாக்கம் போலீசார் கைதாகி சிறையில் இருந்து வெளியே வந்த மோகனை மற்றொரு வழக்கில் கைது செய்ய முயன்றனர். அப்போது, மோகனின் உறவினர்கள், வழக்கறிஞர் உதவியுடன் அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். மோகன் மீது சென்னையில் கேளம்பாக்கம், ஆதம்பாக்கம், துரைப்பாக்கம், தாழம்பூர், வேளச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளன.

இதுவரை மோகன் 200க்கும் அதிகமான மடிக்கணினியை திருடியுள்ளதாகவும், அவைகளை கர்நாடகா மற்றும் கேரள மாநிலத்தில் குறைந்த விலைக்கு அவர் விற்பனை செய்தார் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர். மோகனை மீண்டும் கைது செய்ய கேளம்பாக்கம், செங்கல்பட்டு, தனிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், மோகனை விரைவில் கைது செய்து திருடிய மடிக்கணினியை மீட்க திட்டமிட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர். மடிக்கணினியின் பலே திருடன் மோகன் செங்கல்பட்டு சிறையில் இருந்து விடுதலையாகி வழக்கறிஞர் உதவியுடன் தப்பிச் சென்றது செங்கல்பட்டு சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post விடுதலையானதும் மற்றொரு வழக்கில் கைது செய்ய முயன்றபோது போலீசாரிடம் இருந்து தப்பிய பலே திருடன்: செங்கை சிறை வளாகத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bale ,Sengai Jail Complex ,Chengalpattu ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலை பறிமுதல்