×

வாஷிங்டனில் கொட்டும் மழையில் உற்சாக வரவேற்பு வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து : அதிபர் ஜோ பைடனுக்கு சந்தனப்பெட்டி

* l மனைவிக்கு வைரக்கல் பரிசளித்தார்

வாஷிங்டன்: வாஷிங்டனில் கொட்டும் மழையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வெள்ளை மாளிகையில் அவருக்கு அதிபர் பைடன் தனிப்பட்ட முறையில் விருந்து கொடுத்தார். அப்போது சந்தனப்பெட்டி, வைரக்கல் பரிசு வழங்கி பிரதமர் மோடி அசத்தினார். பிரதமர் மோடி அரசு முறை பயணமாக கடந்த 20ம் தேதி சிறப்பு விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். நியூயார்க் நகரில் எலான் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களைசந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்கு மோடி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயரதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வந்திருந்த தூதர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர். இந்நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இதையடுத்து பிரதமர் ேமாடி, நியூயார்க்கில் இருந்து வாஷிங்டன் சென்றார். அங்கு உள்ள ஆண்ட்ரூஸ் விமான தளத்தில், கொட்டும் மழையில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையை குறிக்கும் வகையில் இரு நாட்டு தேசிய கீதங்கள் விமானப்படை தளத்தில் இசைக்கப்பட்டன. இதையடுத்து, விர்ஜினியா மாகாணம் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள தேசிய அறிவியல் அறக்கட்டளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுடன் பிரதமர் மோடி பங்கேற்றார். அங்கு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘எதிர்காலத்திற்கான திறன்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்தார்.

பின்னர் அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது அவருக்கு 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் இருந்து இறங்கிய மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர். இரு தலைவர்களும் ைககுலுக்கி கட்டி தழுவி அன்பை பரிமாறி கொண்டனர். துணை அதிபர் கமலா ஹாரிசும் இதில் பங்கேற்றார். அதன்பின் இருநாட்டு தலைவர்களும் பரிசுகளை பரிமாறி கொண்டனர். பிரதமர் மோடி சந்தன கட்டையால் செய்யப்பட்ட கலைவண்ணம் மிக்க பெட்டியை ஜோ பைடனுக்கு பரிசாக வழங்கினார். இந்த பெட்டி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தலைசிறந்த கைவினைஞரின் கைவினை பொருளால் தயாரிக்கப்பட்டதாகும். மைசூரில் இருந்து பெறப்பட்ட சந்தனமரத்தால் உருவாக்கப்பட்ட அந்த பெட்டியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வடிவங்கள் நுட்பமாக செதுக்கப்பட்டு இருந்தது. ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு காஷ்மீரின் பேப்பியர் பெட்டியில் வைக்கப்பட்ட 7.5 காரட் க்ரீன் வைரத்தை பரிசாக வழங்கினார்.
அதேபோல் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பழமையான கேமரா ஒன்றை பரிசளித்தார். அதோடு வனவிலங்கு புகைப்பட புத்தகம், கைகளால் உருவாக்கப்பட்ட பழங்காலத்து அமெரிக்க புத்தக பெட்டியையும் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் மற்றும் அவரின் மனைவி, ஜில் பைடன் ஆகியோர் வெள்ளை மாளிகையில் தனிப்பட்ட விருந்து அளித்தனர். அவர்களுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடனிருந்தனர். பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த விருந்தில் அமெரிக்க அதிபர் பைடனின் விருப்ப உணவுகளான பாஸ்தா, ஐஸ் கிரீம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

The post வாஷிங்டனில் கொட்டும் மழையில் உற்சாக வரவேற்பு வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து : அதிபர் ஜோ பைடனுக்கு சந்தனப்பெட்டி appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,White House ,Chancellor ,Joe Bidon ,Washington ,White ,
× RELATED உலக அளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி: சந்திரபாபு நாயுடு புகழாரம்