×

அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி பேச்சு: மேலிடத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி நிபந்தனை

சென்னை: அதிமுக தலைவர்களையும், ஜெயலலிதாவையும் தொடர்ந்து எதிர்த்து வரும் அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்கினால்தான் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்று மேலிட தலைவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவுக்கும், தமிழக பாஜகவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அது, சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்தது. அடிக்கடி அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று மிரட்டி வருகிறார்.

ஜெயலலிதாவையும் ஊழல் முதல்வர் என்று குற்றம்சாட்டினார். எடப்பாடி குறித்தும் சில கருத்துக்களை தெரிவித்தார். இதனால் கூட்டணியில் மோதல் நீடித்தது. அண்ணாமலையை நீக்க வேண்டும் என்று அமித்ஷாவிடம் எடப்பாடி கோரிக்கை விடுத்தார். இதற்காக அவர் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார். ஆனால் அமித்ஷாவோ

அண்ணாமலையையும் அழைத்து இருவரையும் சந்திக்க வைத்தார். இதனால் அமித்ஷா சென்னை வந்த போது உடல்நிலையை காரணம் காட்டி அமித்ஷாவை எடப்பாடி சந்திக்கவில்லை. இதை இரு நாட்களுக்கு முன்னர் அண்ணாமலையே ஒப்புக் கொண்டார். எடப்பாடியை சந்திக்க அமித்ஷா சென்னை வந்தபோது விரும்பினார் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர முடியும் என்று எடப்பாடி பழனிச்சாமி மேலிடத் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளார். அதுவரை எந்த பேச்சும் கிடையாது என்று கூறிவிட்டார். இதனால் தேர்தலுக்கு முன்னர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி எதிர்பார்க்கிறார். இதனால் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

The post அண்ணாமலையை நீக்கினால்தான் கூட்டணி பேச்சு: மேலிடத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி நிபந்தனை appeared first on Dinakaran.

Tags : anamalayas ,Chennai ,Annamalayas ,Jayalalithah ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...