×

பீகாரில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதி அறிவிப்பு

லக்னோ: பீகார் மாநிலத்தில் நாளை நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024ம் ஆண்டு நடப்பதையொட்டி, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை கடந்த 12ம் தேதி நிதிஷ்குமார் கூட்ட ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், அன்றைய தினத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் இருந்ததால் வரமுடியவில்லை என்று கூறப்பட்டது.

இதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை திறக்க இருந்ததால் அவராலும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. தங்களுக்கு பதில் 2ம் கட்ட தலைவர்களை அனுப்புகிறோம் என்று கூறப்பட்டது. ஆனால் இதை நிதிஷ்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியின் தலைவர்கள்தான் கூட்டத்துக்கு வரவேண்டும். அப்போது தான் பாஜ கட்சியை வீழ்த்த ஒருமித்த முடிவு எடுக்க முடியும் என்று கூறியதுடன், எதிர்க்கட்சிகள் கூட்டத்தை 23ம் தேதிக்கு (நாளை) தள்ளி வைத்தார். அன்றைய தினம் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பாட்னாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நிதிஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

இதன் அடிப்படையில் நாளை (23ம்தேதி) பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பா.ஜனதாவை எதிர்க்கும் சுமார் 20 கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜகவை கடுமையாக எதிர்த்த சிரோமணி அகாலி தளம், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது நிலைப்பாட்டை இப்போது வரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பீகாரில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி: மாயாவதி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : bhajan samaj party ,Bihar ,Mayawati ,Lucknow ,Opposition Consultation Meeting ,
× RELATED 10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய...