×

4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் அடையாறு ஆற்றில் 6 மாதங்களில் சுரங்கம் தோண்டப்படும்: மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல்

சென்னை: அடையாறு ஆற்றின் கீழ் 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டும் பணிகள் 5 முதல் 6 மாதங்களில் முடிவடையும் என மெட்ரோ நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டம் 3வது வழித்தடமான 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடமான 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடமான 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை 2026ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2ம் கட்ட திட்டத்தில் மாதவரத்தில் இருந்து சிப்காட் வரை செல்லும் 3வது வழித்தடத்தின் ஒரு பகுதியாக, கிரீன்வேஸ் சாலையை அடையாறுடன் இணைக்க, அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரி கூறியதாவது : கிரீன்வேஸ் சாலையிலிருந்து அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணிக்காக 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் செயல்படுத்தப்படுகிறது. அவற்றில் காவேரி மற்றும் அடையாறு ஆகிய 2 இயந்திரங்கள் அடையாறு பகுதியை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளது.

மீதமுள்ள நொய்யல் மற்றும் வைகை மந்தைவெளி பகுதியை நோக்கி துளையிடப்படுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் இந்த சுரங்கம் துளையிடும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை கிரீன்வேஸ் சாலையில் இருந்து காவேரி சுரங்கம் தோண்டும் இயந்திரம் மட்டும் 150 மீட்டர் வேகத்தில் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியுள்ளது. இருப்பினும் அடையாற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணியானது கடினமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் கிரீன்வேஸ் சாலை மற்றும் அடையாறு நிலையங்களுக்கு இடையே ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த இடைவெளியில் சுரங்கப்பாதை அமைப்பதே மிகவும் கடினமாக இருக்கும்.

ஏனெனில் ஆற்றின் படுக்கையில் எப்போதும் அழுத்த அளவுகள் உள்ளிட்ட மாறுபாடு இருக்கும் என்பதால் இயந்திரத்தை மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்படும். இதில் ஆற்றின் 3 முதல் 5 மீட்டர் ஆழத்திற்கும், ஆற்றின் படுக்கைக்கு கீழே 11 – 13 மீட்டர் வரை தோண்டப்பட உள்ளது. இதில் ரயில் மட்டம் 18 மீட்டரில் இருக்கும். ஒவ்வொரு நாளும் புவியியல் நிலைமைகளை கவனமாக அளவிட வேண்டியுள்ளது. அதன்படி தற்போதைய நிலவரப்படி ஆற்றின் கீழ் களிமண் கலந்த மணல் உள்ளதாக தெரிகிறது. ஆனால் சுரங்கம் தோண்டும் போது இவை வேறுபடலாம். அதன்படி சில வாரங்களில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஆற்றுப்படுகையை அடையும்.

மேலும் இவ்வாறான சவால்கள் நிறைந்த சிறிய நீளமான சுரங்கப்பாதையை முடிக்க 5 முதல் 6 மாதங்கள் ஆகலாம். இருப்பினும் நீருக்கடியில் சுரங்கப்பாதை அமைப்பது என்பது மெட்ரோ நிர்வாகத்திற்கு புதிதான ஒன்று அல்ல. ஏனெனில் முதல் கட்ட மெட்ரோ திட்டத்திலே கூவத்தில் சுரங்கப்பாதையை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மூலம் அடையாறு ஆற்றில் 6 மாதங்களில் சுரங்கம் தோண்டப்படும்: மெட்ரோ நிர்வாக அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Adyar river ,Metro ,CHENNAI ,Dinakaran ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...