×

800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது; வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பெரம்பூர்: வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலில் இன்று காலை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். சென்னை வியாசர்பாடியில் அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி கடந்த 14ம் தேதி கிராம தேவதை பாலாத்தம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பிரமோற்சவம் துவங்கியது. மறுநாள் ஸ்ரீகணபதி ஹோமம் நடத்தப்பட்டு விநாயகர் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து நாள்தோறும் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு தினமும் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வந்தது.

பிரமோற்சவத்தில் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட இரவீஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் உற்சவர் சிலைகள் தேரில் வைக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க அசைந்தாடி சென்றது. வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் திருத்தேர் வீதி உலா தொடங்கி, எருக்கஞ்சேரி ஹை ரோடு, வியாசர்பாடி 2வது பள்ளத் தெரு வழியாக மேகிசின் புரம், வியாசர்பாடி மார்க்கெட் பாலகிருஷ்ணன் தெரு வழியாக மீண்டும் கோயிலை திருத்தேர் வந்தடைந்தது.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் மதியம் 3 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேர் செல்லும் வழி எங்கும் பொதுமக்கள் தேருக்கு ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர். தேர்த் திருவிழாவுக்கு புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் தமிழ்வாணன், செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகர், குணசேகர், வர்கீஸ், வானமாமலை தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி சார்பிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக வழிநெடுகிலும் பொதுமக்கள் அன்னதானம் கொடுத்து தங்களது நேர்த்திக்கடனை செய்தனர்.

இந்த தேரோட்டத்தில் ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, மாமன்ற உறுப்பினர்கள் டில்லிபாபு, ஷர்மிளா காந்தி, ஆனந்தி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாநிதி, அறநிலையத்துறை இணை ஆணையர் தனபால், உதவி ஆணையர் பாஸ்கரன், கோயில் செயல் அலுவலர் ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர், எழுத்தர் நந்தகுமார், முன்னாள் திருப்பணி குழு தலைவர் வியாசை மணி, வியாசர்பாடி நாடார் முன்னேற்ற சங்க தலைவர் செந்தில் முருகன், தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர் யூனியன் பெரம்பூர் கிளை நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post 800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது; வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் appeared first on Dinakaran.

Tags : Vyasarbadi Ravieswarar ,Perampur ,Vyasarbati Ravieswarar Temple ,Chennai Vyasarbadi ,Vyasarbadi ,Navieswarar ,Temple ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு