×

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் நாளை மறுதினம் கொடியேற்றம் ஆனிப்பெருந்திருவிழா ஏற்பாடுகள் இரவு பகலாக மும்முரம்

நெல்லை, ஜூன் 22: நெல்லை டவுன் சுவாமி நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா ஏற்பாடுகள் இரவு பகலாக மும்முரமாக நடந்துவரும் நிலையில் ரதவீதிகள் களை கட்டத்துவங்கியுள்ளன.
திருநெல்வேலி பெயர் வரக்காரணமாகத் திகழும் சுவாமி நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயில் 7ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட பாரம்பரியமிக்கது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயில் ஆண்டுமுழுவதும் பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடந்து வருகின்றன. இதில் தனித்துவமிக்க ஆனிப்பெருந்திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். இதன்படி இந்தாண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா நாளை மறுதினம் (24ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதன் சிகரமான தேரோட்ட வைபவம் வரும் ஜூலை 2ம் தேதி நடக்கிறது.

தமிழகத்திலேயே 3வது பெரிய தேராக சுவாமி ெநல்லையப்பர் தேர் திகழ்கிறது. 450 டன் எடை கொண்ட இந்த தேர் ஆண்டு தோறும் ஆனி மாத தேர் திருவிழா நாளில் பொக்லைன், யானை போன்ற எந்த உதவியுமின்றி முழுக்க முழுக்க பக்தர்கள் பலத்தால் 4 வடங்களை பிடித்து இழுக்கப்படுவது தனி சிறப்பாகும். திருவிழா நாட்களில் காலை, மாலை சுவாமி- அம்பாள் வீதியுலா நடைபெறும். 8ம் நாளன்று சுவாமி கங்காளநாதராக தங்கச்சப்பரத்தில் திருவோடு ஏந்தி வலம் வருவார். மறுநாள் தேரோட்டம் நடைபெறும். முதலில் விநாயகர் முருகன் தேர்களும் தொடர்ந்து சுவாமி, அம்பாள் தேரும் இழுக்கப்படும் இந்த தேர்கள் நிலையை சேர்ந்ததும் சண்டீகேஸ்வரர் தேர் இழுக்கப்படுகிறது.

ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு இதற்கான ஏற்பாடுகள் தற்போது கோயில் உள்ளேயும் வெளிப்பகுதியிலும் இரவு பகலாக நடந்து வருகின்றன. கோயிலில் உள்ள நின்றசீர் நெடுமாறன் அரங்கில் தினமும் இரவு சிறப்பு ஆன்மீக, பக்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் கோயில் முன்பாக பிரமாண்டமான முறையில் வண்ண பந்தல் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்பாட்டு பணிகளையொட்டி ரதவீதிகளில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் செல்வதற்கான இரும்பு தடுப்புகள் அமைக்கும் பணிகளில் போக்குவரத்து போலீசார் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர். குறிப்பாக நயினார்குளம் சாலை, பார்வதி ஷேசமஹால் முதல் அருணகிரி தியேட்டர் செல்லும் சாலைகளில் தேவையான இடங்களில் இரும்பு தடுப்புகளை வைத்துள்ளனர். அத்துடன் ரத வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வழக்கம்போல் காந்திமதி அம்பாள் கோயில் நூலக வளாகத்தில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

The post நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோயிலில் நாளை மறுதினம் கொடியேற்றம் ஆனிப்பெருந்திருவிழா ஏற்பாடுகள் இரவு பகலாக மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Nelleyapar- ,Gandhimathi ,Amphal Temple ,Nolla ,Sawami Goosebar Temple ,Nolli Town ,Goer- Gandhimati ,Amphal ,Temple ,
× RELATED நெல்லையப்பர் கோவிலில் காணிக்கை...