×

உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு

பாலக்கோடு, ஜூன் 22: பாலக்கோட்டில் உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்தனர். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், பாலக்கோடு பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, பைபாஸ் ரோடு, தர்மபுரி ரோடு மற்றும் தக்காளி மார்க்கெட் பகுதிகளில் உள்ள உணவகங்கள் மற்றும் துரித உணவகங்களில் ஆய்வு செய்தார். ஆய்வில் 2 உணவகங்கள் மற்றும் ஒரு சாலையோர துரித உணவு கடையில், செயற்கை நிறமூட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு உணவகத்தில் பலமுறை பயன்படுத்திய 3 லிட்டர் சமையல் எண்ணெய் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. மேலும், 2 கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 கடைகளுக்கு தலா ₹1000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் கூறுகையில், ‘உணவகங்களில் சுத்தம், சுகாதாரம் கடைபிடிக்க வேண்டும். பணியாளர்கள் தலையுறை, கையுறை அணிய வேண்டும். சமைத்த உணவு, இறைச்சியை பிரிட்ஜ் மற்றும் குளிர்பதன பெட்டிகளில் கண்டிப்பாக வைக்கக் கூடாது. உபயோகப்படுத்தும் மூலப்பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உரிய தயாரிப்பு முகவரி, உணவு பாதுகாப்பு உரிமம் எண், தயாரிப்பு தேதி, முடிவு தேதி போன்ற விவரங்கள் உள்ளதா என்பதை அறிந்து உபயோகப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும்,’ என்றார்.

The post உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Safety ,Palakot ,Karimangalam ,Dinakaran ,
× RELATED தீ தடுப்பு தொழிலக பாதுகாப்பு குழு கூட்டம்