×

ரயில்வே துறை அனுமதியுடன் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை, ஜூன் 22: கணேசபுரம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்குவதை தடுக்க, ரயில்வே துறையில் அனுமதி பெற்று நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் 17 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்த காரணத்தால், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக கத்திப்பாரா சந்திப்பிலும், ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியின் காரணமாக கணேசபுரம் சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேக்கம் ஏற்பட்டது. இதுவும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அகற்றப்பட்டது. மற்ற அனைத்து இடங்களும் உடனடியாக இயல்பு நிலைக்கு வந்துவிட்டது.

தற்போது நடந்த கூட்டத்தில் மழைநீர் தேங்கிய இடங்களில் தண்ணீர் நிற்காமல் செல்வதற்கான வழிவகைகள், அங்கு மோட்டார் பம்புகள், வாகனங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருத்தல், பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீர்செய்தல், முடிக்கப்படாமல் உள்ள மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகள் ஆகியவற்றை உடனடியாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் போன்ற பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

மழைக்காலத்தில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் அனைவரும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். கணேசபுரம் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ரயில்வே துறையிடம் அனுமதி பெறப்பட்டு, இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே, மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தையும் 2 மாதக் காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ரயில்வே துறை அனுமதியுடன் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதை தடுக்க தீர்வு: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Ganesapuram tunnel ,Minister KN Nehru ,Chennai ,Ganesapuram ,Dinakaran ,
× RELATED கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்