துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் இந்தியாவின் அஷ்வின் முதலிடத்திலும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும் நீடிக்கின்றனர்.
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் லபுஷேன் முதலிடத்திலும், ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் மூன்றாம் இடத்திலும் இருந்தனர்.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் முதல் 3 இடங்களில் இருந்த ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் இரு இன்னிங்சிலும் சேர்ந்து; லபுஷேன் 13 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 22 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 66 ரன்களை மட்டுமே எடுத்தனர்.
இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் இரு இன்னிங்சிலும் சேர்ந்து 164 ரன்களை குவித்தார். இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி முடிவடைந்த நிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அதில் இங்கிலாந்து அணி வீரர் 887 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நியூசிலாந்து அணி வீரர் 883 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி வீரர் லபுஷேன் 877 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். டாப் 10 வரிசையில் இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட் 10வது இடத்தில் உள்ளார். பவுலிங் தரவரிசையில் இந்தியாவின் அஷ்வின் முதலிடத்திலும், ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும் நீடிக்கின்றனர்.
The post ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடம்! appeared first on Dinakaran.