×

தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் மாடுகளின் உணவு தேவை பூர்த்தி செய்வது எப்படி?

*நீடாமங்கலம் வேளாண் அதிகாரி விளக்கம்

நீடாமங்கலம் : தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் மாடுகளின் உணவு தேவை பூர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய மருத்துவ அறிவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் மு.சபாபதி கூறியதாவது,கறவை பசுக்கள் கடலோர மாவட்டங்களில் அதிகம் விரும்பி வளர்க்கப்படுகின்றன. பசுக்களில் இருந்து கிடைக்கும் பாலை விற்பது போக மிகுதியாக கன்றுகளும் சாணமும் கிடைக்க பெறுகின்றன. மாட்டுச்சாணம் வயல்களில் உரமாகவும், குளங்களில் மீனுக்கு உணவாகவும் மற்றும் இயற்கையை விவசாயத்தில் மண்புழு உரம், பஞ்சகாவியா, மீன் அமிலம் மற்றும் மாட்டு கொம்பு உரங்கள் தயாரிப்பதில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மாடுகள், ஒவ்வொன்றும் ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.70 ஆயிரம் வரை விற்கப்படுகின்றன.

இந்நிலையில் மழைக்காலங்களில் நோய் தொற்றினாலும், உயிரிழப்பினாலும் பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி வருகின்றன. மழைக்காலங்களில் கொட்டகையை ஈரப்பதம் மிகாமல் வைத்திருப்பது மிகவும் அவசியம்.எனவே மழைக்காலத்தில் மாட்டு கொட்டகைகளின் கூரைகள் ஒழுகா வண்ணம் ஓட்டை ஒடிசல் அற்று, தென்மேற்கு பருவக்காற்றால் பாதிக்கப்படாத வண்ணம் தூண்கள் வலுவாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் மாட்டு கொட்டகை தரையை வழு, வழுப்பாக இல்லா வண்ணம் நன்கு சுரண்டி தேய்த்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

தரை ஈரப்பதமாகவும் அதிக சாணத்துடன் கிடப்பதால் கறவை பசுக்கள் படுத்திருக்கும் போது, மடி முழுவதும் சாணி மற்றும் குப்பைகளால் அழுக்காவதால் மடி நோய் தொற்று வருவதற்கான வாய்ப்புண்டு. மடி நோய் வந்தால் பால் குறைவு ஏற்படும். ஒரு சில மாடுகள் நிரந்தரமாக ஒரு காம்பை இழக்க நேரிடும்.எனவே மடிநோய் வரா வண்ணம் வருமுன் காப்பது மிகவும் நல்லது.
இதற்கு பால் கறவைக்கு முன்னும் பின்னும் மடியை நன்கு கழுவி உலர்ந்த சுத்தமான துணியால் துடைத்து விட வேண்டும். மாட்டு கொட்டகையில் மழைக்காலங்களில் அடிக்கடி சாணம் மற்றும் சிறுநீர் கழிவுகளை அகற்றி விட வேண்டும். மழைக்காலங்களில் கிருமிகளில் வீரியம் கூடி நோய் தொற்று ஏற்படுவதால், தோல் கழலை (Lumpy Skin Disease), வாய்க்காணை (Foot and Mouth Disease), தொண்டை அடைப்பான், அடைப்பான் மற்றும் சப்பை நோய்களுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இளங்கறவை மாடுகள் காப்பீடு செய்யப்படாமல் விடப்பட்டிருந்தால் அருகில் உள்ள கால்நடை மருத்துவர் அல்லது காப்பீட்டு நிறுவனத்தை அணுகி அனைத்து இளம் கறவை பசுக்களையும் காப்பீடு செய்து கொள்ளலாம். மேலும் வெள்ளப்பெருக்கு, இயற்கையின் சீற்றம் மற்றும் நோய் தொற்று போன்றவற்றால் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்படும் போது, அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவரை அணுகி முறைப்படி தகவல் தெரிவித்து அரசு மூலம் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுக் கொள்ள வழி செய்யலாம்.

தொடர்ந்து மழை பெய்வதால் மாடுகளை வயல் மேடுகளில் மேய்க்க இயலாது. எனவே எப்போதும் மூன்றில் இருந்து ஒரு வாரம் வரை தேவைப்படும் பசும்புற்களை அறுவடை செய்து, அதனை தலைகீழாக அரை மணி நேரம் மழை நீர் வடிய விட்டு, உலர்த்தி பின்பு தினமும் மாட்டிற்கு உணவிடலாம்.போதுமான அளவு பசும்புற்களை மழைக்காலங்களில் அறுவடை செய்ய முடியாவிட்டால், அதற்கு பதிலாக வைக்கோல் போன்ற வறத் தீவனம், சிறிதளவு கலப்புத் தீவனம் மற்றும் தவிடு போன்றவற்றை உணவாக அளிப்பதன் மூலம் மாடுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யலாம்.மேலும் இளம் கன்றுகள் மற்றும் நல்ல கறவை பசுக்களுக்கு உயிர்ச்சத்து நிறைந்த விட்டமின் டானிக்கை தினமும் 50 முதல் 100 மில்லி வரை கொடுத்து வருவதால் அவற்றின் நோய் எதிர்ப்பு திறனையும் அதிகரிக்க செய்யலாம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post தென்மேற்கு பருவ மழைக்காலத்தில் மாடுகளின் உணவு தேவை பூர்த்தி செய்வது எப்படி? appeared first on Dinakaran.

Tags : Nidamangalam ,Niedamangalam ,Southwest Seasonal ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் களையை கட்டுப்படுத்த கோனோவீடர் கருவி