×

பருவம் தவறிய மழையால் மகசூல் பாதிப்பு பருத்தி கொள்முதல் விலை உயர்த்தி வழங்க வேண்டும்

*விவசாயிகள் வலியுறுத்தல்

வலங்கைமான் : பருவம் தவறிய மழையால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதால், பருத்தி கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அறுவடைக்கு பிறகு கோடை சாகுபடி ஆக பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.வலங்கைமான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 14 ஆயிரம் எக்டேரில் சம்பா மற்றும் தாளடி அறுவடை பணிகள் முடிவுற்ற நிலையில் ஆதிச்ச மங்கலம் , சந்திரசேகரபுரம் கோவிந்தகுடி மருவத்தூர் மேல விடையல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 8 ஆயிரத்து 250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சித்தன்வாளூர் வேளூர்,மாத்தூர் விளத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் முறையே சுமார் 250 ஏக்கர் வீதம் பருத்தி சாகுபடி செய்யப் பட்டடுள்ளது. சுமார் ஆயிரம் ஏக்கரில் கடந்த சில ஆண்டு வரை பருத்தி சாகுபடி செய்து வந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 8 ஆயிரத்து 250 ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தி சாகுபடி துவங்கிய நிலையில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்ததால் பல இடங்களில் பருத்தி செடிகள் பாதிப்படைந்தது. கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது மற்றும் ஆட்கள் பற்றாக்குறையை சமாளிக்க இயந்திரத்தின் உதவியுடன் மண் அணைத்தல், மண் கிளறுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதால் பருத்தி சாகுபடி இந்தாண்டு கூடுதலாக உள்ளது .

வலங்கைமான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக பருத்தி சாகுபடி பல இடங்களில் பெரிய அளவில் பாதிப்பு அடைந்தது.
வலங்கைமான் பகுதியில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ள மொத்த பரப்பளவில் 20 சதவீதம் மழையின் காரணமாக செடிகள் பாதிக்கப்பட்டதை அடுத்து தொடக்க நிலையிலே உழவு செய்யப்பட்டு நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது .மேலும் 30 சதவீத இடங்களில் பருத்தி செடிகள் போதிய வளர்ச்சி இன்றி காணப்படுகிறது .விவசாயிகள் பருத்தி செடியின் வளர்ச்சியை ஊக்கப்படுத்திடவும், களைகளை கட்டுப்படுத்திடவும் வழக்கத்தை விட 50 சதவீதம் கூடுதலாக செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்றாண்டு தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றிற்கு சராசரியாக ரூ. 12, 200 வரை கொள்முதல் விலை கிடைத்தது. ஆனால் நடப்பு ஆண்டில் பருத்தி கொள்முதல் விலை அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 500 மட்டுமே பருத்தி விவசாயிகளுக்கு கிடைக்கிறது.எனவே பருத்தியின் கொள்முதல் விலையை நியாயமாக உயர்த்திடக்கோரி பருத்தியை இந்திய ஒன்றிய அரசு நேரடியாக இடைத்தரகர்கள் இல்லாமல் உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post பருவம் தவறிய மழையால் மகசூல் பாதிப்பு பருத்தி கொள்முதல் விலை உயர்த்தி வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Valankhaiman ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?