×

வெடிவைத்து தகர்த்து 2 ஆண்டுகளாகி விட்டது தளவானூரில் புதிய தடுப்பணை கட்டுவது எப்போது?

* மழைக்காலத்திற்கு முன்பு நடவடிக்கை தேவை

* விழுப்புரம், கடலூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே தளவானூர் தடுப்பணை தகர்க்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டநிலையில் மழைக்காலத்திற்கு முன்பாக புதிய தடுப்பணையை கட்டி தண்ணீரை சேமிக்கவும், கிளை ஆறுகளில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 2 மாவட்ட விவசாயிகளின் 20 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று புதிதாக அணைக்கட்டு கட்ட கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ.25 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு கட்டும் பணி கடந்த 30.1.2019 அன்று தொடங்கப்பட்டது.

இந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும், 3.1. மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டி முடிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி திறக்கப்பட்டது.அணைக்கட்டின் இருபுறமும் பக்கத்திற்கு 3 மதகுகள் வீதம் மொத்தம் 6 மதகுகளை கொண்டது. இந்த அணைக்கட்டு வினாடிக்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 215 கனஅடி நீரை வெளியேற்றும் திறன் கொண்டது.

மேலும் இருபுறங்களிலும் அமையப்பெற்றுள்ள மதகுகள் மூலம் வினாடிக்கு 5,105 கனஅடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது. இங்கு அணைக்கட்டு கட்டப்பட்டதன் மூலம் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு தென்பெண்ணையாற்றின் இரு பகுதிகளில் உள்ள விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர்திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் ஆகிய 8 கிராமங்களும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம், காவனூர், உளுந்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய 5 கிராமங்கள் என மொத்தம் 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 87 திறந்தவெளி கிணறுகள் இந்த அணைக்கட்டால் பயன்பெறும் வகையிலும், அதுமட்டுமின்றி இந்த அணைக்கட்டால் 2114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும் கட்டப்பட்டது.

அதேபோல் மலட்டாறு, வாலாஜா கால்வாய் மற்றும் எனதிரிமங்கலம் கால்வாய்களில் தண்ணீர் செல்வதன் மூலம் பாசனம் மேம்படும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வகையில் கட்டப்பட்டது. இந்த அணைக்கட்டு திறக்கப்பட்டு 2 மாதங்களிலேயே தண்ணீர் வரத்து தொடங்கியது. பலத்த மழையால் அணைக்கட்டு நிரம்பி அதிலிருந்து தண்ணீர் இரு கரைகளையும் தொட்டவாறு ஆர்ப்பரித்து சென்றது. இதனை விழுப்புரம்- கடலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பலரும் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் அவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை. அணைக்கட்டு திறக்கப்பட்டு 3 மாதங்களே ஆன நிலையில் உடைந்து தண்ணீர் வெளியேறியது.

எனதிரிமங்கலம் பகுதியில் அணைக்கரை பலமாக போடப்படாததால் கரைப்பகுதியில் உள்புறமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகளவில் கசிந்து வெளியேறியதோடு 3 ஷட்டர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. அணைக்கட்டுக்கு தண்ணீர் வந்த சில வாரங்களிலேயே உடைப்பு ஏற்பட்டதால் 2 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் அதிருப்தியடைந்தனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டபின் அரசு உரிய நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், அந்த அணைக்கட்டை நேரில் பார்வையிட்டு ரூ.15 கோடியில் அணைக்கட்டை சீரமைப்பதற்காக கோப்புகளை அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் விரைவில் இந்த அணைக்கட்டை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படுவதாக இருந்தது. அதற்குள் மழைக்காலம் தொடங்கி ஆற்றில் வெள்ளம் செல்வதால் சீரமைப்பு பணிகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. தண்ணீர்வரத்து அதிகரித்ததால் இடதுபுற கரைப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு கான்கிரீட் சுவர்களை வெள்ளம் அடித்துச்சென்றது.

தளவானூர் பக்கமிருந்த 3 மதகுகளும் 2 வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. தொடர்ந்து ஊருக்குள் வெள்ளம்புகாமலிருக்க அணைக்கட்டு முற்றிலுமாக வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.25.35 கோடியில் தரமற்றமுறையில் கட்டப்பட்ட தடுப்பணையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனிடையே மீண்டும் ஆய்வு செய்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தடுப்பணை புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக ஆய்வு செய்து திட்டமதிப்பீடு அரசுக்குஅனுப்பிவைத்தபின், நிதிஒதுக்கீடு செய்து பணிகள் துவங்குமென்று தெரிவித்தனர். ஆனால் இதுவரையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அணை உடைந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இதற்கான பணிகள் நடைபெறவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே தடுப்பணை கட்டுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லீஸ்சத்திரம், சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு நிதிஒதுக்கீடு

இதனிடையே விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டுவதற்கும், கடலூர் மாவட்ட எல்லையில் உள்ள சொர்ணாவூர் அணைக்கட்டு கட்டுவதற்கும் அரசு நிதிஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்ட தளவானூர் அணைக்கட்டு கட்டுவதற்கு மட்டும் இன்னும் நிதிஒதுக்கீடு செய்யப்படாதது ஏன்? என்று விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

The post வெடிவைத்து தகர்த்து 2 ஆண்டுகளாகி விட்டது தளவானூரில் புதிய தடுப்பணை கட்டுவது எப்போது? appeared first on Dinakaran.

Tags : Talavanur ,Villupuram ,Cuddalore ,Dalavanur ,
× RELATED பண்ருட்டி அருகே 15ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு நாணயங்கள் கண்டெடுப்பு