×

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க ₹4 கோடியில் தங்க கொடிமரங்கள் பிரதிஷ்டை

*வரும் 25ம்தேதி கும்பாபிஷேகம்

வேலூர் : வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 25ம்தேதி நடக்க உள்ள நிலையில் நேற்று வேதமந்திரங்கள் முழங்க ₹4 கோடியில் தங்க கொடிமரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வரும் 25ம்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் தங்க கொடிமரம் பிரதிஷ்டை நேற்று நடந்தது. கலவை சச்சிதானந்த சுவாமிகள் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் சண்முகம், உப தலைவர் வெங்கடசுப்பு, உறுப்பினர்கள் ரமேஷ், சிவாச்சாரியார் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக தங்க முலாம் பூசிய அம்மன் கொடி மரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

தொடர்ந்து கும்பாபிஷேகம் குறித்து கோயில் நிர்வாகம் சார்பில் கூறியதாவது:தங்க கொடிமரம் சென்னை, காஞ்சிபுரம், கும்பகோணம் பகுதியை சேர்ந்த வல்லுனர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. நூறாண்டு வரை இந்த கொடி மரங்கள் எந்தவித சேதமும் இன்றி இருக்கும். சுமார் ₹4 கோடியில் 3 கிலோ தங்க முலாம் பூசப்பட்டு தங்கக்கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ₹40 லட்சத்தில் கலசங்களுக்கு எலக்ட்ரோ பிளேட் வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோயிலுக்கு தொழிலதிபர் அபிராமி ராமநாதன் ₹5 கோடி மதிப்பீட்டில் தங்கத்தேர் வழங்க உள்ளார்.

கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க ஓய்வு பெற்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயிலில் விஐபி வாகனங்கள் உள்பட 4 சக்கர வாகனங்களில் 150 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்ஙகளுக்கு அனுமதியில்லை. கும்பாபிஷேக தொடக்க விழாவில் 125 பெரிய கலசங்கள், 1,125 சிறிய கலசங்கள் கொண்டு மகா கும்பாபிேஷகம் நடைபெறும்.

சுமார் 40 ஆயிரம் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் முதல் 2 நாட்கள் 20 ஆயிரம் பேருக்கு பிரசாதம் வழங்கப்படும். மருத்துவகுழு, தீயணைப்பு துறை மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எஸ்பி மணிவண்ணன் அறிவுறுத்தலின்பேரில் நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஜலகண்டேஸ்வரருக்கு சுமார் 600 கிராம் எடையுள்ள ₹40 லட்சம் மதிப்புள்ள ஸ்வர்ண பந்தனம் அமைக்கப்பட உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது. ஜலகண்டேஸ்வரர் கோயில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அறநிலையத்துறை தொடர்பான வழக்கு கடந்த 42 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இவ்வாறு கோயில் நிர்வாகிகள் கூறினர்.

The post வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க ₹4 கோடியில் தங்க கொடிமரங்கள் பிரதிஷ்டை appeared first on Dinakaran.

Tags : Jalakandeswarar temple ,Vellore Fort ,Kumbabhishekam ,Vellore ,Vellore Fort Jalakandeswarar Temple ,Fort ,
× RELATED ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரமோற்சவ...