×

நாட்டின் ஒருமைபாட்டு உனர்வை, ஜனநாயக விழுமியங்களை காப்பதற்கான முன்னெடுப்பு 2024 தேர்தலில் நல்ல விளைவை தரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நாளை மறுநாள் பீகாரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கருணாநிதியின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிஉல்லர்.

இது தொடர்பாக முதல்வர் எழுதியுள்ள கடிததில்:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்;
முத்தமிழறிஞர் பிறந்த திருக்குவளையும் அவர் வளர்ந்த திருவாரூரும் உடன்பிறப்புகளுக்குத் திருத்தலங்கள். அங்கே செல்வது என்றால் ஒவ்வொரு உடன்பிறப்புக்கும் உற்சாகமும் புத்துணர்வும் ஏற்படும். உங்களில் ஒருவனான எனக்கும் அதே உணர்வுதான் எப்போதும் இருக்கும். நேற்று அந்த உணர்வு சற்று மிகுதியாகவே இருந்தது!

ஆரூரின் ஆழித்தேர் வடிவில் திருவாரூர் காட்டூரில் எழிலார்ந்த முறையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தைத் திறந்து வைத்தபோது, என் நெஞ்சில் எத்தனையோ எண்ண அலைகள்!

விழாப் பந்தல் நிரம்பி வழியும் அளவுக்குத் திரண்டிருந்த உடன்பிறப்புகளின் நெஞ்சங்களிலும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரைப் பற்றிய எண்ணங்களே மிகுந்திருந்ததை அறிவேன்.

ஒரு நூற்றாண்டுக்கு முன் உதித்த திராவிடச் சூரியன் நம் தலைவர் கலைஞர். 14 வயதிலிருந்து தன் போராட்டக் கதிர்களை வீசி, தமிழ்மொழியையும் தமிழினத்தையும், தமிழ்நாட்டையும் கடைசிவரை ஒளி திகழச் செய்த சூரியன் அவர். சின்ன கிராமமான திருக்குவளையில் பிறந்து, சிறிய நகரமான திருவாரூரில் வளர்ந்தவர். தந்தை பெரியாரையும் பேரறிஞர் அண்ணாவையும் கொள்கை வழி ஏற்றுக் கொண்டு, அவர்கள் காட்டிய பாதையில் பொதுவாழ்வுப் பயணத்தை மேற்கொண்டவர். 13 தேர்தல் களங்களில் தோல்வியே காணாமல் வெற்றிகண்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பொறுப்பேற்று, இந்திய அரசியலின் மூத்த தலைவராக விளங்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவரை எதிர்காலத் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். தளராத முயற்சியுடன், திட்டமிட்ட இலக்கு நோக்கி, அயராது உழைத்தால் எளிய மனிதனும் உயர்ந்த இடத்திற்கு வரமுடியும் என்ற நம்பிக்கையைப் பெறுவதற்கும் திருவாரூரில் உயர்ந்து நிற்கிறது கலைஞர் கோட்டம்.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த 2018-ஆம் ஆண்டு நிறைவுற்று எங்கும் நிறைந்த பின்னர், நானும் எனது சகோதரி செல்வி செல்வம் அந்த நிலத்தை வாங்கினோம். பின்னர், அதனை தயாளு அம்மாள் அறக்கட்டளைக்குக் கொடுத்தோம். எனது அன்னை பெயரிலான அந்த அறக்கட்டளையை நிர்வகிக்கும் அறங்காவலர்களான மருத்துவர் மோகன் காமேசுவரன், சம்பத்குமார் கலைஞரின் புகழ்ப் போற்றும் அந்த எழில் கோட்டையாம் ‘கலைஞர் கோட்டத்தை’ உருவாக்கியுள்ளார்கள்.

மாவட்டக் கழகச் செயலாளர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. விழா ஏற்பாடுகளைக் கச்சிதமாக செய்து, போக்குவரத்து நெருக்கடியோ, பொதுமக்களுக்கு இடையூறுகளோ இல்லாத வகையில் விழாவை நடத்திக் காட்டியிருக்கிறார். பொதுப்பணித்துறை -நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஒட்டுமொத்த கோட்டத்தின் கட்டுமானத்தையும் கவனமுடன் மேற்பார்வையிட்டு அதன் எழிலை உறுதிசெய்திருக்கிறார்.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு – வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விழா நாளில் ஒருங்கிணைப்புப் பணிகளை நல்ல முறையில் மேற்கொண்டார். திருவாரூர் மாவட்டக் கழக நிர்வாகிகள், பிற மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் எனப் பலருடையை ஒத்துழைப்பும் நேற்றைய விழாவை வெற்றிகரமாக்கியது. திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசை, கவிப்பேரரசு வைரமுத்து தலைமையிலான கவியரங்கம், நடுவர் சாலமன் பாப்பையா தலைமையிலான பட்டிமன்றம், இன்னிசை வழங்கிய மாலதி லட்சுமன் குழுவினரின் பாட்டரங்கம் எனக் காலையில் தொடங்கி மாலைவரை முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத்தன்மையை எடுத்துரைத்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் தேன் சுவை!

நம்முடைய அன்பான அழைப்பை ஏற்று, பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி வருகை தந்து திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்ததுடன், இந்தியாவின் ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் காப்பதற்கு முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கை எப்படி துணையாக நின்று வழிகாட்டுகிறது என்பதை விளக்கினார். உடல்நலக்குறைவால் அன்பிற்குரிய பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் வர இயலாவிட்டாலும், தன் உள்ளத்து உணர்வுகளையெல்லாம் உரையாக எழுதி, இந்திய அரசியல் களத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் இன்றும் எப்படி வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்பதை விளக்கியிருந்தார். அதன் தமிழாக்கத்தை திருச்சி சிவா எம்.பி., உணர்வுபூர்வமாக உடன்பிறப்புகளிடம் எடுத்துரைத்தார்.

கலைஞர் கோட்டத்தைத் திறக்கின்ற பெரும் வாய்ப்பு எனக்கு வாய்த்த நிலையில், கோட்டத்தினைப் பார்வையிட்ட சிறப்பு விருந்தினர்கள், கழக நிர்வாகிகள் எல்லாரும் கண்கள் விரிந்திட, கலைஞரின் பேராற்றலைக் கண்டு வியந்தனர். ‘சாதாரண மனிதர்களிடமிருந்துதான் ஒரு சகாப்தத்தின் விடிவுக்கான ஒளி கிளம்புகிறது’ என்கிற தலைவர் கலைஞரின் பொன்மொழியே அவரது வாழ்க்கையாகவும் அவரது நூற்றாண்டு செய்தியாகவும் அமைந்திருப்பதை அருங்காட்சியகத்தில் உள்ள புகைப்படங்கள் – ஆவணங்கள் வாயிலாக அறிகின்ற யார்தான் ஆச்சரியப்படாமல் இருக்க முடியும்?

தன் வாழ்வின் நிகழ்வுகளையும், அதன் வழியே தமிழ்நாடு – இந்திய அரசியல் செய்திகளையும் நெஞ்சுக்கு நீதியாக எழுதி ஆவணப்படுத்தியவர் முத்தமிழறிஞர் கலைஞர். எழுத்தின் எல்லாப் பரிமாணங்களிலும் தன் படைப்புகளை வெற்றிகரமாக வழங்கியவர். அவருடைய நூல்களைக் கொண்டே ஒரு நூலகம் அமைக்க முடியும். கோட்டத்தில் தலைவர் கலைஞரின் தந்தை முத்துவேலர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். அது நூலகமாக மட்டுமில்லாமல், முத்தமிழறிஞர் கலைஞரின் வாழ்க்கைக்கான ஆவணக் காப்பகமாகவும் திகழும். எதிர்காலத் தலைமுறையினருக்கு, இரு நூற்றாண்டை ஆண்ட தலைவரின் பெருமையைச் சொல்லும்.

காலத்திற்கேற்ற அறிவியல் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு செயல்பட்டவர் கலைஞர். நாடகம் முதல் ஊடகம் வரை அவரது படைப்புகள் தொடர்ந்தன. பேருந்து முதல் மெட்ரோ ரயில்வரை அவரது திட்டங்கள் தொடர்ந்தன. உழவர் சந்தையும் தந்தார்; டைடல் பார்க்கும் தந்தார். அவரது கோட்டத்திலும் நவீனத் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான செல்ஃபி பாயிண்ட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு நாற்காலிகள் காலியாக இருக்கும். ஒரு நாற்காலியில் நாம் உட்கார்ந்து, பக்கத்தில் உள்ள நாற்காலியைப் பார்த்து வணங்கலாம், புன்னகைக்கலாம். அந்த நொடியில் எடுக்கப்படும் ஃபோட்டோ, சில நொடிகளில் பிரிண்ட் போடப்பட்டு நம் கைக்கு வரும்போது, நமக்கு பக்கத்தில் கலைஞர் உட்கார்ந்திருப்பார். Augmented Reality என்ற புதிய தொழில்நுட்பத்தின் விளைவு இது.

கலைஞரை நேரில் பார்க்க வாய்ப்பில்லாத தலைமுறையினர், இந்தக் கோட்டத்திற்கு வந்து அவரது வாழ்க்கை வரலாற்றை, சளைக்காத போராட்டத்தை, தொலைநோக்குத் திட்டங்களை, நிகரற்ற படைப்பாற்றலைத் தெரிந்து கொள்ளும்போது, இப்படிப்பட்ட அற்புதத் தலைவரைப் பார்க்காமல் போய்விட்டோமே என்ற ஏக்கத்தைத் தணிக்கும் வாய்ப்பு இது.

பள்ளி – கல்லூரி மாணவச் செல்வங்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைவரும் திருவாரூர் திருத்தலத்தில் அமைந்துள்ள கலைஞர் கோட்டத்தை ஒரு முறையாவது நேரில் சென்று பார்க்க வேண்டும். நூற்றாண்டு நாயகர் தலைவர் கலைஞரின் 80 ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்வை அறிந்திட வேண்டும். முத்தமிழறிஞர் பிறந்து – வளர்ந்த காலத்தில் திருவாரூர் எப்படி இருந்தது, இன்று அந்த நகரம் மாவட்டத் தலைநகராக்கப்பட்டு, மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டதாக வளர்ச்சியடைந்திருப்பதற்கு காரணம் தலைவர் கலைஞர்தான் என்பதை கோட்டத்திற்கு வருகின்ற ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள முடியும். கழக உடன்பிறப்புகள் தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது மட்டுமல்ல, நேரத்தை ஒதுக்கி ஒரு முறையேனும் கலைஞர் கோட்டத்தைக் காண வேண்டும். கோட்டத்தைக் காணும்போது உடன்பிறப்புகளின் உள்ளத்தில் உத்வேகம் பிறக்கும்.

அந்த உத்வேகத்தைக் கலைஞர் கோட்டம் திறப்பு விழா நாளில் நானும் பெற்றேன். கோட்டத்தில் உள்ள திருமண அரங்கில் நான்கு இணையர்களுக்கு சுயமரியாதைத் திருமணத்தை எளிய முறையில் நடத்தி வைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் கட்டிக்காத்த தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா கொள்கைகளுக்கு வலிமை சேர்த்தோம். கொள்கை வலிவும் இயக்க உணர்வும் பெருகிடத் திருவாரூர் திருத்தலத்தின் நிகழ்வுகளைத் தொடர்ந்து, பாடலிபுத்திரம் என வரலாற்றில் பெயர் பெற்ற பாட்னா நகருக்குப் புறப்பட ஆயத்தமாகிவிட்டேன்.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் நான் உரையாற்றியது போல, இந்தியாவைக் காத்திட மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. மதவெறி கொண்ட பா.ஜ.க.வை வீழ்த்துவது ஒன்றே இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காத்திடும். அதற்கான முன்னெடுப்பை பீகார் முதலமைச்சர் அன்பிற்குரிய நிதீஷ் குமார் மேற்கொண்டிருக்கிறார். ஜூன் 23-ஆம் நாள் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் நடைபெறவுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், காலமெல்லாம் மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் பிரதிநிதியாக நான் பங்கேற்கிறேன். இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டு உணர்வை – ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான இந்த முன்னெடுப்பு 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல விளைவைத் தரும் என்ற நம்பிக்கை மிகுந்திருக்கிறது.

கலைஞருக்குக் கோட்டம் கண்டோம். அவர் வழியில் ஜனநாயகப் போர்க்களத்தைச் சந்தித்து நாட்டு நலன் காண்போம். என கூறியுள்ளார்.

The post நாட்டின் ஒருமைபாட்டு உனர்வை, ஜனநாயக விழுமியங்களை காப்பதற்கான முன்னெடுப்பு 2024 தேர்தலில் நல்ல விளைவை தரும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : 2024 elections ,CM. G.K. Stalin ,Chennai ,Karunanidi ,Bihar ,India ,CM ,G.K. Stalin ,
× RELATED தூர்தர்ஷன் தொலைக்காட்சியின்...