×

ராகி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை

போச்சம்பள்ளி, ஜூன் 21: ரேஷன் கடைகளில் ராகி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ ராகி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் தற்போது நீலகிரி, தர்மபுரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தர்மபுரி மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட உள்ள ராகிக்கு குவிண்டால் ₹3,578 என அறிவிக்கப்பட்டது. தற்போது, தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் ஏக்கரில் ராகி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 45 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ராகி சாகுபடி செய்யப்படுகிறது. ஹெக்டேருக்கு 1.5 டன் முதல் 2 டன் வரை மகசூல் கிடைக்கிறது. பயிரிட்டு 90 முதல் 150 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். மழையில் நனைந்து விட்டால் முளைத்து விடும், கருப்பு நிறமாகி விடும். ராகி பால் பிடிக்கும் நேரத்தில் நோய் தாக்குதல் ஏற்படும். எந்த இயற்கை பேரிடரும் இல்லாமல் விளைந்தால் ஏக்கருக்கு 15 முதல் 30 மூட்டைகள் வரை அறுவடை செய்யலாம். கடந்த காலங்களில் ராகிக்கு உரிய விலை கிடைக்காததால் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் ராகி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும், விவசாயிகளிடம் நேரடியாக ராகி கொள்முதல் செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராமகவுண்டர் கூறுகையில், கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் ராகியை அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். எனவே, ராகி கொள்முதல் நிலையங்களை நிரந்தரமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ராகி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும். குவிண்டாலுக்கு ₹3578 என்றால், கிலோவுக்கு ₹35.78 பைசா மட்டுமே கிடைக்கும். இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியாக இருக்காது. மளிகை கடைகளில் ராகி கிலோ ₹40 முதல் ₹50 வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே, அரசு குவிண்டாலுக்கு ₹4 முதல் ₹5 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தற்போது, ஒரு குடும்ப அட்டைக்கு 2 கிலோ ராகி என அறிவித்துள்ளதை மாற்றி 5 கிலோ வழங்க வேண்டும். சிறு- குறு விவசாயிகளிடம் மட்டுமே கொள்முதல் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை மாற்றி, அனைத்து விவசாயிகளிடமிருந்தும் ராகி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடம் நேரடியாக ராகி கொள்முதல் செய்ய சூளகிரி தாலுகா சாமானப்பள்ளி, செட்டிப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர், பேளகொண்டப்பள்ளி, கெலமங்கலம், ஓசூர் தாலுகா, பாகலூர், தளி அடுத்த சாளிவரம் ஆகிய இடங்களில் கொள்முதல் நிலைங்கள் திறக்கப்பட்டன. தற்போது, ராகி கொள் முதல் நிலைங்கள் மூடப்படுவதாக தெரிகிறது. எனவே, ராகி கொள்முதல் நிலையங்களை நிரந்தரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறுகையில், ராகி கொள்முதல் நிலையங்களை தொடர்ந்து செயல்படுத்த அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் ராகி சாகுபடி பரப்பளவு கணக்கீடு செய்து கொள்முதல் நிலையங்கள் கூடுதலாக திறக்கவும் கருத்துரு அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

The post ராகி கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Bochampally ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...