×

சூளகிரி வேளாண் அலுவலகம் முன் குட்டையாக தேங்கிய கழிவு நீர்

சூளகிரி, ஜூன் 21: சூளகிரி வேளாண் அலுவலகம் முன் குட்டைபோல் தேங்கிய கழிவு நீரை நேரில் பார்வையிட்டு, கால்வாய் அமைக்க கலெக்டர் உத்தரவிட்டார். சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண் அலுவலகம் இயங்கி வந்தது. அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் சூளகிரி -உத்தனப்பள்ளி சாலையில் கடந்த 3 ஆண்டுக்கு முன், ₹2 கோடி மதிப்பில் ஒருங்கினைந்த வேளாண்மை விரிவாக்க அலுவலகம் அமைக்கப்பட்டது. தாழ்வான பகுதியில் கட்டப்பட்டதால் சூளகிரி, மருதாண்டப்பள்ளி, தியாகரசனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி வேளாண் அலுவலக வளாகத்தில் குட்டை போல் தேங்கிக் கிடக்கிறது. இதையடுத்து, கடந்த 2 மாதத்திற்கு முன்பு மீண்டும் பழைய கட்டிடத்திற்கே வேளாண்மை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், கழிவு நீர் தேங்கியதால் புற்கள் முளைத்து புதர்மண்டிய காணப்படும் வளாகம் தவளைகளின் இருப்பிடமாக மாறியுள்ளது. மேலும், தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் மீன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. அவற்றை உணவாக்கிக் கொள்வதற்காக கொக்கு கூட்டமும் படையெடுத்தவாறு உள்ளன. மழை நீர் புகுந்ததில் மேலும் விதை கிடங்கு சேதமாகி உள்ளது. இதுகுறித்து தினகரன் நாளிதலில் செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, நேற்று காலை வேளாண் அலுவலகத்திற்கு வந்தார். குட்டை போல் தேங்கிய கழிவு நீரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அதிகாரிகளை கடிந்து கொண்டார். உடனே, கழிவு நீரை அகற்றி தூய்மைப்படுத்துமாறு அறிவுறுத்தினார். ஆனால், கழிவு நீர் தேங்காத வகையில் ₹35 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாக்கடை கால்வாய் பணி மேற்கொள்ள அதிகாரிகளுக்கு கலெக்டர் சரயு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தோட்டகலை இயக்குனர் பூபதி, தாசில்தார் பன்னீர்செல்வி, பொறியாளர் மாது, தோட்டகலை உதவி இயக்குனர் சிவசங்கரி, வேளாண் உதவி இயக்குனர் ஜான் லூர்து சேவியர் பிடிஓக்கள் சிவகுமார், கோபாலகிருஷ்ணன், ஒன்றிய பொறியாளர்கள் சுமதி, சியாமளா, ஆர்ஐ ரமேஷ், விஏஓ அகிலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post சூளகிரி வேளாண் அலுவலகம் முன் குட்டையாக தேங்கிய கழிவு நீர் appeared first on Dinakaran.

Tags : Chulagiri Agriculture Office ,Chulagiri ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...