×

ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் தாழ்வு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்: பொதுமக்கள் கடும் அவதி

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக லேசான முதல் மிதமான மழைபெய்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இருப்பினும் லேசான மழைக்கே பல பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் அவதிப்பட்டனர். ஆர்.கே.பேட்டை காவல்நிலையம் அருகில் வெள்ளாத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றுவர மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.

ஸ்ரீகாளிகாபுரம் ஊராட்சி அமுதாரெட்டி கண்டிகை கிராமத்தில் சாலைக்கு அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்க பள்ளியை சுற்றி குழி தோண்டப்பட்ட நிலையில் பெய்த மழைக்கு குழிகளில் மழைநீர் நிரம்பியதாலும், பள்ளிக்கு சென்றுவர வசதியின்றி மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

விளையாடும் போது குழியில் குழந்தைகள் விழுந்து விபத்து ஏற்படும் முன் உடனடியாக குழி அடைக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். எரும்பி கிராமத்தில் வீடுகள் தாழ்வாகவும், சாலை மேடாகவும் இருப்பதால் மழை நீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது. பள்ளிப்பட்டு அருகே அத்திமாஞ்சேரி ஊராட்சி கட்டிடம் தாழ்வான பகுதியில் இருப்பதால், அலுவலகத்தில் மழைநீர் புகுந்தது. ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டில் தாழ்வு பகுதிகளை சூழ்ந்த மழைநீர்: பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : R.R. ,Thiruvallur district ,r. K.K. Hood ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவர் உயிரிழப்பு