×

மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் வடிகால் பணிக்கு இடையூறாக உள்ள கம்பங்களை உடனே அகற்ற வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

ஆலந்தூர்: மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிக்கு இடையூறாக உள்ள கம்பங்களை உடனே அகற்ற வேண்டும், என அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்திற்கு உட்பட்ட புழுதிவாக்கம் (186வது வார்டு), மடிப்பாக்கம் (188வது வார்டு) போன்ற பகுதிகளில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் கால்வாய் கட்டுமான பணிக்கு மின்கம்பங்கள் இடையூறாக இருப்பதால், பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கடந்த வாரம் நடந்த பெருங்குடி மண்டலக்குழு கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். அப்போது, மண்டலக்குழு தலைவர் ரவிச்சந்திரன் பணிகள் தடைபடும் பகுதிகளில் துறை சம்மந்தமான அமைச்சர்களை அழைத்து வந்து, பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இந்நிலையில், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் மேற்கண்ட பகுதிகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மின்துறை தலைவர் ராஜேஷ் லக்கானி, சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மண்டலக்குழு தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். 186வது வார்டுக்கு உட்பட்ட புழுதிவாக்கம் வடக்கு ராம்நகர், சீனிவாசன் நகர், ராமலிங்கம் நகர், 188வது வார்டுக்கு உட்பட்ட மடிப்பாக்கம் தெற்கு ராம்நகர், குபேரன் நகர், நியு குபேரன் நகர் போன்ற பகுதிகளில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணிகளை அதிகாரிகளுடன் சென்று அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வடிகால் பணிக்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை உடனடியாக மாற்றித் தரும்படி அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு, உடனடியாக மின் கம்பங்களை இடமாற்றம் செய்வதாக அமைச்சர் தங்கம் தென்னசு உறுதியளித்தார்.

ஆய்வுக்கு பின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: சென்னையில் 3, 4 சென்டி மீட்டர் மழை பெய்தாலே இடுப்பளவு, முழங்கால் அளவு தண்ணீர் வாரக் கணக்கில் தேங்கி இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மட்டுமேரூ.700 கோடி செலவில் 200 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய மழைநீர் வடிகால்வாய்களை பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடித்துள்ளார். இதனால், தற்போது இயல்பைவிட 246 சதவீதம் அதிகமாக மழை பெய்தும், சென்னையில் மழைநீர் தேங்கவில்லை. விரைந்து வடிந்துள்ளது. சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் போன்ற பகுதிகளில் கடந்த மழையின் போது இருந்த பாதிப்பு தற்போது ஒரு துளியும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மடிப்பாக்கம் என்றாலே இரண்டு அல்லது மூன்று சென்டிமீட்டர் மழைக்கு படகுகளுடன் வந்து மக்களை மீட்டெடுக்கும் நிலை இருக்கும். ஆனால் இந்த சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் 14வது மண்டலத்தில் மட்டும்ரூ.67 கோடிக்கு புதிய மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை பொருத்தவரை மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், கால்வாய்களில் இடையே சுமார் 137 இடங்களில் மின் கம்பங்கள் இருக்கின்றன. இதனை மின்துறை அமைச்சரிடம் தெரிவித்தவுடன், நானே நேரில் வருகிறேன் என்று வந்து குபேரன் நகரில் ஆய்வு செய்தார். இந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியினை விரைந்து மின்சாரத்துறை செய்ய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே, வடிகால்வாய் பணிகள் விரைவில் முழுமை பெறும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, மண்டலப் பொறியாளர் முரளி, மாமன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், சமீனா செல்வம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

The post மடிப்பாக்கம், புழுதிவாக்கம் பகுதிகளில் வடிகால் பணிக்கு இடையூறாக உள்ள கம்பங்களை உடனே அகற்ற வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madipakkam ,Purudivakam ,Minister ,Thangam ,South Government ,Alandur ,
× RELATED பல கொலை வழக்குகளில் தலைமறைவு பிரபல ரவுடி அதிரடி கைது