×

தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் அண்ணாநகர் மண்டலம், வார்டு-95க்குட்பட்ட வில்லிவாக்கம் அகத்தியர் நகர் பகுதி மற்றும் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73க்குட்பட்ட புளியந்தோப்பு, பென்சனர்ஸ் லேன் பகுதி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களையும் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

தென்மேற்கு பருவமழையினைத் தொடர்ந்து, நேற்று காலை 11.00 மணிக்குள்ளாக சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. குறிப்பாக, பெருநகர சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறையின் சார்பில் பராமரிக்கப்படும் 26 சுரங்கப்பாதைகளில் கணேசபுரம் சுரங்கபாதையில் மட்டும் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 11 மணியளவில் மழைநீர் வெளியேற்றப்பட்டு கணேசபுரம் சுரங்கபாதையில் போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பெருநகர சென்னை மாநகராட்சியின் தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இடர்பாடுகளை நீக்குவதற்காக போர்க்கால அடிப்படையில் 24 மணிநேரமும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பொதுசுகாதாரத்துறையின் மூலம் மழைநீர் தேங்கியுள்ள குடிசை மற்றும் தாழ்வான பகுதிகளில் நேற்று தேங்கிய மழைநீரின் காரணமாக பொதுமக்களுக்கு எந்தவித நோய்த்தொற்று பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்காக, மண்டலத்திற்கு 6 இடங்கள் என 90 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாமில் ஒரு மருத்துவர், செவிலியர், உதவியாளர் மற்றும் இதர பொது சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் பணியில் இருப்பார்கள். பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவர்கள், மருத்துவசார் பணியாளர்கள் மற்றும் மருந்துகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளது. தற்பொழுது பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் குடிநீரினை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடித்திட வேண்டும்.

இதுமட்டுமில்லாமல் சென்னை மாநகரில் உள்ள 15 நகர்ப்புர சமுதாய நல மையங்கள் மற்றும் 140 ஆரம்ப சுகாதார நலவாழ்வு மையங்களிலும் பொதுமக்களுக்கு கட்டணமில்லாமல் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. 27 ஆண்டுகளுக்கு பிறகு நேற்றைய தினம் அதிகளவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்யக்கூடிய சராசரி அளவை விட அதிகளவில் 13 செ.மீ. அளவிற்கு சென்னையில் மட்டும் மழை பெய்துள்ளது.

சென்னை மாநகரை பொறுத்தவரையில் 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பெய்த மழை என இரண்டு பகுதிகளில் கிட்டத்தட்ட சுமார் 1154 கி.மீ. அளவிற்கு மழைநீர் வடிகால் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 800 கி.மீ. அளவிற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒட்டுமொத்த மதிப்பீடு ரூ.1520 கோடி ஆகும். 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரூ.250 கோடி மதிப்பீட்டில் 70 கி.மீ. நீளத்திறகு மழைநீர் வடிகால் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 30 கி.மீ.க்கும் மேல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. பருமழைக்கு முன்னதாக இந்தப் பணிகள் அனைத்தும் முடிவுறும். இந்தப் பணிகள் நிறைவுற்றதால் 2021ஆம் ஆண்டு எங்கெல்லாம் மழைநீர் தேங்கியிருந்ததோ, 2022ஆம் ஆண்டு மழைநீர்த் தேக்கம் குறைந்திருந்தது.

அதேபோல், 2022ஆம் ஆண்டு எங்கெல்லாம் மழைநீர் தேங்கியிருந்ததோ, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கண்காணிப்பு மற்றும் நேரடி கட்டுப்பாட்டில் பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக 2023-ம் ஆண்டு நிச்சயம் மழைநீர்த்தேக்கம் குறையும். இன்று வரை 30 இடங்களில் சுமார் 6 மரங்கள் பெரிய அளவிலும், 24 சிறிய அளவிலும் மரங்கள் முடிந்து விழுந்தது உடனடியாக அவைகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. இந்த மரங்களை அகற்றுவதற்காக 6 சக்திமான் வாகனங்கள், 200 மர அறுவை இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ரிப்பன் கட்டட தலைமையிடத்தில் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

மேலும், பொதுமக்கள் 10 இணைப்புகள் கொண்ட 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு மழைத் தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். பெருநகர சென்னை மாநகராட்சியில் மழைக்கால பணிகளை மேற்கொள்ள 3,200 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மழைநீரை வெளியேற்ற 260 உயரழுத்த மோட்டார் பம்புகள், 200 சிறிய மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 1,530 இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 2000 பணியாளர்கள் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 330 கழிவுநீர் அகற்றும் நிலையங்களில் Storage pumping station, 986 பம்புசெட்டுகள், 250 ஜெனரேட்டர்கள் தயார்நிலையில் உள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 2,260 பணியாளர்கள் 20 பிரிவுகளாக பிரிந்து சுமார் 138 இடங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் அமைச்சர் பெருமக்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறை அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு சென்னை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 400 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பணிகள் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளின் போது இணை ஆணையாளர் (பணிகள்) டாக்டர் ஜி. எஸ். சமீரன், மண்டல கண்காணிப்பு அலுவலர் கணேசன், அவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் சரிதா மகேஷ்குமார் , . கூ. பி. ஜெயின், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் எ.நாகராஜன், குமாரசாமி அவர்கள் திருமதி சுதா தீன தயாளன் உட்பட பலர் உடனிருந்தனர்.

 

The post தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Minister ,Segarbabu ,Raintime Special Medical Camp ,Chennai ,southwest ,Raintime Special Medical Department ,Public Health Department ,Raintime ,Special Medical ,Camp ,Southwest Monsoon Day ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...