×

விமானம் நிற்கும் இடம் வரை எடப்பாடியின் கார் செல்ல அனுமதி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: விமான நிலையங்களில், விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரையில் காரில் செல்வதற்கான சிறப்பு அனுமதியை எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அளித்துள்ளது. பொதுவாக விமான நிலையங்களில் விமான ஓடுதளம் வரை பஸ்சில் சென்று, அங்கிருந்து பயணிகள் விமானத்தில் ஏற வேண்டியிருக்கும். மிக மிக முக்கியமான பிரமுகர்களுக்கும் மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரையிலும் காரிலேயே செல்ல அனுமதி உண்டு. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது. அதில், ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களில், எடப்பாடி பழனிசாமி விமானம் நிறுத்தப்பட்டு இருக்கும் இடம் வரை தனது காரிலேயே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக எடப்பாடி பழனிசாமிக்கு இந்த அனுமதி வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு விமான நிலையத்திற்கு சென்ற போது, அங்குள்ள பஸ்சில் பயணம் செய்தார். அப்போது ராஜேஸ்வரன் என்ற நபர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து அதிமுகவின் துரோகி என விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர், அந்த நபரின் செல்போனை பறித்தார். பின்னர் விமான நிலையத்தில் அதிமுகவினரும் அந்த நபரை தாக்கினர். இதை தொடர்ந்து தான் விமானம் நிற்கும் இடம் வரையில் தனது சொந்த காரில் செல்ல வேண்டும் என ஒன்றிய விமான போக்குவரத்து துறைக்கு எடப்பாடி பழனிசாமி அனுமதி கேட்டு கோரிக்கை கடிதம் எழுதியிருந்தார். அதனால் தற்போது அவருக்கு இந்த சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

The post விமானம் நிற்கும் இடம் வரை எடப்பாடியின் கார் செல்ல அனுமதி: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Edipadi ,Union Government ,New Delhi ,Paranisamy Union ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை